நீடூரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு அங்குள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
நாகை மாவட்டம் நீடுரில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க வந்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். இதனை அறிந்த அந்தப்பகுதி மக்கள் அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். தகவலறிந்த மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் மற்றும் போலீசார் போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பிரச்சனையின் விபரீதத்தை உணர்ந்த போலீசார் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வாகனத்தை வேறு பாதை வழியாக திருப்பி அனுப்பினர். இதனைக் கண்ட போராட்டக்காரர்கள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கார் வந்த பாதையை நோக்கிச் சென்று போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் சுற்றிவளைத்து தடுத்து நிறுத்தினர். ஆவேசமான போராடக்காரர்களோ மயிலாடுதுறை வளர்ச்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியனையும், அதிமுக அரசையும் கண்டித்து முழக்கமிட்டனர்.
இதனால் நீடூர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்ற பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.