கடலூர் அருகே செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயச்சந்திரன். இவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த அவர் உடனடியாக பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் பாம்பு பிடி வீரர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு உடனே வந்தார். அப்போது வீட்டில் எங்கு தேடியும் பாம்பு கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கீழே குச்சியை விட்டுத் தட்டியபோது, திடீரென குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் பாம்பு ஏறி படம் எடுத்தது. இதனைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே பாம்பைப் பிடிக்க பத்து நிமிடம் போராடி, பாம்பு பிடி வீரர் பாம்பைப் பிடித்து ஒரு டப்பாவில் அடைத்தார். பாம்பு படம் எடுத்து ஆடியபோது, அங்கிருந்தவர்கள் சூடம் ஏத்தி வழிபட்டனர். பாம்பு குளிர்சாதனப் பெட்டியில் படம் எடுத்து ஆடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போராடி பாம்பைப் பிடித்த பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு அனைவரும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்