
சென்னையில் உள்ள புரசைவாக்கம் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட 5 இடங்களில் இன்று (28.01.2025) காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (N.I.A) சோதனையில் ஈடுபட்டனர். அதே போன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் என்ற பகுதியில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதாவது திருமுல்லைவாசலைச் சேர்ந்த ஃபாசித் மற்றும் எல்லை கட்டிருப்பு தெருவில் வசித்து வரும் சாதிக் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
பல்வேறு மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பாக கடந்த 2023ஆம் ஆண்டு புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தது. சென்னை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 20 இடங்களில் திடீரென என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மயிலாடுதுறை திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்த அல்பாசித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னையில் அம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றிக் கொண்டே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இக்மா சாதீக் என்பவருடன் தொடர்பில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.