Skip to main content

கணவனின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனை கோரிய பிரேமா வழக்கு! -விருத்தாசலம் மாஜிஸ்திரேட் முடிவெடுக்க உத்தரவு

Published on 19/11/2020 | Edited on 19/11/2020

 

 

neyveli person incident police chennai high court

 

 

நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென்ற மனைவி பிரேமாவின் கோரிக்கை குறித்து, விருத்தாசலம் மாஜிஸ்திரேட் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நகை பறிப்பு வழக்கில் கைதான நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகன், விருத்தாசலம் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்தபோது மரணமடைந்த விவகாரத்தில், நெய்வேலி ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட மூன்று காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதியக்கோரியும், கணவர் உடலை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு மறு பிரேதபரிசோதனை செய்யக்கோரியும், செல்வமுருகனின் மனைவி பிரேமா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு, நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் பிரேமா தரப்பில், ‘என் கணவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதிலிருந்தே பல விதிமீறல்கள் நடந்துள்ளன. உடலில் 7 காயங்கள் இருந்தன. உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. என்னுடைய ஒப்புதலோ கையெழுத்தோ இல்லாமல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. என்னை மாஜிஸ்திரேட் விசாரிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டப்பட்டது. அப்போது மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு சார்பில், உண்மை கண்டறியும் குழு அமைத்து விசாரித்ததாகவும், செல்வமுருகன் உடலுக்கு மீண்டும் பிரேத பரிசோதனை கோரி மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கில் தங்களையும் அனுமதிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது. அரசுத் தரப்பில்,‘சி.பி.சி.ஐ.டி.-யின் அறிக்கையை நீதிமன்றத்திற்கு மட்டும் தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறோம்.பிரேத பரிசோதனை விதிமுறைகளுக்குட்பட்டே செய்யபட்டுள்ளது. எனவே, மீண்டும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாஜிஸ்திரேட் விசாரிக்கவில்லை எனக் கூறுவது தவறு" எனத் தெரிவிக்கப்பட்டது.

 

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, பிரேமாவின் கோரிக்கையை விருத்தாசலம் மாஜிஸ்திரேட் பரிசீலித்து முடிவெடுக்கலாமே எனத் தெரிவித்தார். அதற்கு அவசியம் இல்லை எனத் தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், மாஜிஸ்திரேட் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை நாளையே தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அதை ஆராய்ந்து சென்னை உயர்நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என விளக்கம் அளித்தார். ஆனால், அதனை ஏற்க மறுத்த நீதிபதி, மறு பிரேத பரிசோதனை குறித்த பிரேமாவின் கோரிக்கையை, விருத்தாசலம் மாஜிஸ்திரேட் (JM -1 - Virudhachalam) பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்