கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலைய பகுதிகளில் பல ஆண்டுகளாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், வீட்டு வசதி, மருத்துவ சேவை உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவை என்.எல்.சி நிர்வாகம் செயல்படுத்தாமல் உள்ளதாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதையடுத்து தொ.மு.ச, சி.ஐ.டி.யு, பா.தொ.ச, தொ.வா.ச, ஐ.என்.டி.யூ.சி, உள்ளிட்ட 7 சங்கங்களைச் சேர்ந்த என்.எல்.சி ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் நிர்வாகத்துடன் நீண்டநாள் கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியும், கோரிக்கையை என்.எல்.சி நிர்வாகம் ஏற்காததால் நேற்று (11.02.2020) என்.எல்.சி தலைமை அலுவலகத்தில் வேலை நிறுத்த அறிவிக்கையை மனிதவளத்துறை இயக்குனரிடம் வழங்கினர்.
வருகின்ற 25- ஆம் தேதிக்குள் என்.எல்.சி நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். நிர்வாகம் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் 25- ஆம் தேதி நள்ளிரவு பணி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.