புத்தாண்டில் அரசு விதித்துள்ளக் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று (29/12/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31- ஆம் தேதி அன்று இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாததால் அனைவரும் புத்தாண்டை அவரவர் குடும்பத்தினருடன் வீடுகளிலேயே கொண்டாடுங்கள். பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பார்கள். மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக்கூடாது; மீறினால் கைது செய்யப்படுவார்கள், வாகனமும் பறிமுதல் செய்யப்படும். நீண்ட தூரம் பயணிப்பவர்கள் இரு சக்கர வாகனத்தைத் தவிர்த்துவிட்டு ரயில் அல்லது பேருந்துகளில் பயணிக்கலாம். நான்கு சக்கர வாகனங்களில் வெளியூர் செல்பவர்கள் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை தேநீர் அருந்திவிட்டு பயணத்தைத் தொடரலாம், ஓட்டல் ஊழியர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்பதை நிர்வாகம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தாண்டில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.