புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஒமிக்ரான், கரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு, தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் தடை விதித்துள்ளனர். எனினும், புதுச்சேரியில் நிபந்தனைகளுடன் புத்தாண்டு கொண்டாடட்டங்களுக்கு, அம்மாநில அரசு அனுமதி அளித்திருந்தது. இதனால், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட நண்பர்கள், குடும்பத்தினருடன், அங்கு படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக, புதுச்சேரியில் தங்கும் விடுதிகள், மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் நோய்த்தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், ஜெகநாதன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "ஒமிக்ரான் காரணமாக, அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் புதுச்சேரிக்கு படையெடுத்துள்ளனர். புதுச்சேரியில் ஏற்கனவே இரண்டு பேருக்கு ஒமிக்ரான் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, மற்ற மாநிலங்களைப் போல், புதுச்சேரியிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரியுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று (29/12/2021) மதியம் அவசர வழக்காக விசாரிப்பதாக நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பரத சக்ரவர்த்தி அமர்வு அறிவித்துள்ளது.