திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலை கிராமம் பூலத்தூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். கொடைக்கானலுக்கு மாற்று பாதையாக வத்தலகுண்டு பூலத்தூர் சாலையை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். கிராம சபையில் மலை கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ., "கொடைக்கானல் மலையில் 300 கிலோ மீட்டர் சாலை உள்ளது. ஆனால் மக்கள் தொகை குறைவாக உள்ளதால், கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு இயலவில்லை. இருப்பினும், இந்தாண்டு 2,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், அனைத்து மலை கிராம மக்களும் பயனடையும் வகையில், புதிய வழித்தடங்கள ஏற்படுத்திப் பேருந்துகள் இயக்க வழிவகை செய்யப்படும். மேலும் பழனியில் கூட்டு குடிநீர் திட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தனது அறிவுறுத்தலின் படி லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் தங்கு தடையின்றி நடந்து வருவதாகவும் விரைவில் கூட்டுக் குடிநீர் திட்டம் சீர் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.