திருச்சியில் சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. பல்வேறு வகைகளில் விளம்பரங்கள் செய்து ஆன்லைன் மோசடிகள் செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி வேலை தருவதற்காக இளைஞர்களிடம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது போலி ஆன்லைன் இன்வெஸ்ட்மென்ட் செயலி மூலம் பணத்தை இளைஞர்கள் இழந்து தவிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
முசிறி, மணப்பாறை, துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த படித்த இளைஞர்கள் இந்த மோசடி கும்பலிடம் சிக்கி பல லட்சம் பணத்தை இழந்துள்ளனர். இது பற்றி திருச்சி புறநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் கூறும்போது, “இந்த மோசடிகள் ஆன்லைன் செயலி வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் நடத்தப்படுகிறது. கல்லூரி பேராசிரியராக இருக்கும் ஒருவர் ரூ. 4.75 லட்சம் இழந்துள்ளார்.
இந்த செயலியில் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல் இடம்பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்து கிளிக் செய்தால், மோசடி பேர்வழிகள் கொடுக்கும் வங்கி கணக்குக்கு பணத்தை செலுத்த வேண்டும். பணம் செலுத்திய அடுத்த நொடி பொருள் விற்கப்பட்டதாக டிஸ்ப்ளேயில் காண்பிக்கும். மேலும் அதற்கான கமிஷன் தொகையும் டிஸ்ப்ளேயில் தெரியும். எடுத்துக்காட்டாக ரூ. 500 செலுத்தி பொருள் வாங்கினால், உங்கள் கணக்கில் ரூ. 600 கணக்கில் சேர்ந்ததாக காண்பிக்கவும். ஆனால் ரீபண்ட் மட்டும் உடனே தர மாட்டார்கள். அடுத்த கட்டத்திற்கு சென்றால் மேலும் கூடுதல் கமிஷன் தொகை கிடைக்கும் என தகவல் கொடுப்பார்கள். இந்த அடிப்படையில் மேற்கண்ட பேராசிரியர் ரூ 4.75 லட்சம் பணத்தை இழந்துள்ளார். ஆனால் ரீபண்ட் அவருக்கு வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் நம்மிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று 20க்கும் மேற்பட்ட பட்டப் படிப்பு முடித்த இளைஞர்கள் ரூ.5000 முதல் 5 லட்சம் வரை செலுத்தி ஏமாந்துள்ளார்கள். ஒரு இளைஞர் வங்கியில் கடன் பெற்று அந்த தொகையை போலி ஆன்லைன் இன்வெஸ்ட்மெண்ட் செயலி மூலம் முதலீடு செய்து தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த டிஜிட்டல் எம்.எல்.எம். மோசடியில் அதிகம் படித்த இளைஞர்களே சிக்கிக் கொண்டுள்ளனர். மோசடி கும்பல் இன்ஸ்டாகிராம் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ் அப் பயன்படுத்துவதில்லை.
சாட்டிங் மட்டுமே நடக்கும். இதனால் நம்மை ஏமாற்றுபவர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாது. பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் இந்த மோசடி நடந்துள்ளது. வட மாநிலத்தைச் சேர்ந்த மோசடி கும்பல் இதில் அதிகம் ஈடுபட்டிருக்கிறது. ரூ.5000, ரூ.6000 செலுத்தி விட்டு சுதாகரித்து மேலும் பணம் செலுத்தாமல் தப்பித்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் போட்ட தொகையை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கண்மூடித்தனமாக தொடர்ச்சியாக பணத்தை முதலீடு செய்தவர்கள் தவித்து வருகின்றனர்.
ஒரு பொருளை ஆர்டர் செய்தால் நம் கைக்கு அந்த பொருளும் வருவதில்லை. கமிஷன் தொகையும் உடனடியாக நம் வங்கிக் கணக்குக்கு வந்து சேரவில்லை. செயலி டிஸ்ப்ளேயில் வரும் தகவலை மட்டும் நம்பி படித்த இளைஞர்கள் ஏமாந்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. முதலீடு செய்யும் போது இது சாத்தியமா? என சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆன்லைன் மோசடியை பொருத்தமட்டில் உடனடியாக புகார் அளித்தால் மட்டுமே வங்கி கணக்கை முடக்க முடியும். மோசடி பேர்வழிகள் பணத்தை எடுத்து விட்டால் மீட்பது கடினமானது” என்றார்.