தமிழகத்தில் பருவநிலை காரணமாக இன்ஃபுளுயன்சா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு அதற்கான சிகிச்சைகளை மருத்துவமனைகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு சார்பில் காய்ச்சல் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் புதிய காய்ச்சல் ஒன்றைப் பற்றி திருச்சி அரசு மருத்துவமனை டீன் செய்தியாளர்களைச் சந்தித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ''ஸ்க்ரப் டைபஸ் என்ற இந்த காய்ச்சல் ஒரியண்டா சுட்டுகாமோஷி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறி. உண்ணி காய்ச்சல் என்று அழைக்கப்படும் இது யாருக்கு அதிகம் வருகிறது என்றால் அதிகமாக இந்த காய்ச்சல் பெண்களுக்கு தான் வருகிறது. மண்ணில், தரையில் கை வைத்து யார் அதிகம் புழங்குகிறார்களோ அவர்களுக்கு அந்த காய்ச்சல் அதிகமாக பரவ வாய்ப்பு இருக்கிறது.
உடலில் மார்பகத்திற்கு கீழோ, மறைக்கப்பட்ட பகுதியிலோ, முதுகு பகுதியிலோ புண் போன்ற ஆறாத அறிகுறிகள் இருந்தாலும், அம்மைக்கு வரக்கூடிய சிறு சிறு புள்ளிகளாக வரக்கூடிய தோலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் போன்றவையும் இதன் அறிகுறி. இவை சில நேரத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய மூளைக்காய்ச்சல் போன்று மாறிவிடுகிறது. வீட்டில் உள்ள செல்லப் பிராணிகள் வழியாகவும் இந்த உண்ணி காய்ச்சல் பரவுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் கண்ட நோயாளிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். அதை விடுத்து விட்டு மருந்தகங்களில் தாங்களாகவே மருந்துகளை வாங்கி உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.