கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம், மாவட்டத்திற்கு உள்ளேயும் பயணிக்க இ-பதிவு செய்யப்பட வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் திருமண விழாவில் பங்கேற்பவர்கள் அத்தனை பேரின் வாகன எண்களும் ஒரே இ-பதிவில் குறிப்பிடப்பட வேண்டும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி, திருமண நிகழ்விற்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஒரே பதிவில் திருமணத்திற்கு வரும் அணைத்து விருந்தினர்களின் பெயர்கள் அவர்களின் வாகன எண்கள் உள்ளிட்ட விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும். அதனை மணமகன், மணமகள் அல்லது அவர்களின் தாய், தந்தை என இவர்களில் ஒருவர் மட்டுமே செய்ய வேண்டும்,
மேலும், இ – பதிவை மேற்கொள்ளும் விண்ணப்பதாரரின் பெயர் (மணமகன், மணமகள், தாய், தந்தை) திருமண அழைப்பிதழில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, இ – பதிவின் போது திருமண அழைப்பிதழைக் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தவறான தகவல் அளித்து ஒரு நிகழ்வுக்கு அதிகமுறை இ – பதிவு செய்தால் சிவில், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.