Skip to main content

950 கோடியில் திருச்சியில் புதிய விமான முனையம்! (படங்கள்)

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
try

 

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் விமானநிலையத்தில் போக்குவரத்தும், சரக்கு போக்குவரத்தும் அதிகமாக நடைபெற்று வருகிறது. இது தமிழகத்தின் மையப்பகுதி என்பதால் திருச்சியை சுற்றி உள்ள 10 மாவட்ட மக்கள் இதை பயன்படுத்தி வருகிறார்கள். 

 

இந்த நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் (டெர்மினல்) கட்டப்பட இருக்கிறது. இந்த புதிய முனையத்தின் மாதிரி வடிமைப்பை வெளியிடும் நிகழ்ச்சி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. அப்போது இந்திய விமான நிலைய ஆணைய குழுமத்தின் பொது மேலாளர் சஞ்ஜீவ் ஜிண்டல் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

’’திருச்சி விமான நிலைய புதிய முனைய கட்டுமான பணிக்கான ஆரம்பகட்ட வேலைகளை பிரான்சு நாட்டை சேர்ந்த ஈஜிஸ் என்ற நிறுவனம் ஆரம்பித்து விட்டது. கட்டுமான பணிகள் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. புதிய முனையத்தின் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.950 கோடியாகும்.   இதில் முனைய கட்டிடம் ரூ.872 கோடியிலும், விமானங்கள் நிறுத்துமிடம் ரூ.63 கோடியிலும், வான் போக்குவரத்து கோபுர கட்டுப்பாட்டு அறை ரூ.15 கோடியிலும் கட்டப்படும். 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஏப்ரன் மற்றும் கட்டுப்பாட்டு அறை பணிகள் நிறைவடையும். 

 

tr2

 

முனைய கட்டிடம் கட்டுமான பணிகள் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும்.

இந்த புதிய முனையமானது 61 ஆயிரத்து 634 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும். திருச்சி மண்ணின் பண்பாடு மற்றும் கலையம்சத்தை விளக்கும் வகையில் சர்வதேச தரத்துடன் கட்டிடத்தின் முன்பகுதி பிரமாண்டமாக அமைக்கப்படும். பயணிகள் புறப்பாடு பகுதியில் 10 வாசல்களும், வருகை பகுதியில் 6 வாசல்களும் இருக்கும். பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்ய 48 எண்ணிக்கையில் கவுண்ட்டர்களும், குடியுரிமை சோதனை தொடர்பாக 40 கவுண்ட்டர்களும் இயங்கும். எக்ஸ்ரே சோதனை கருவிகள் 15 அமைக்கப்படும். பயணிகளின் பொருட்களை அனுப்புவதற்காக 5 மையங்கள் அமைக்கப்படும்.

 

trk

 

புறப்பாடு மற்றும் வருகை பகுதியில் ஒரே நேரத்தில் 2,900 பயணிகளையும், ஒரு வருடத்திற்கு 30 லட்சத்து 63 ஆயிரம் பயணிகளையும் கையாள முடியும். தற்போது ஒரே நேரத்தில் 470 பயணிகளை கையாளும் வசதி உள்ளது. புதிய முனையத்தின் கூரை சர்வதேச தரத்தில் நவீன கட்டிட கலையை பிரதிபலிக்கும் வகையில் மிகவும் உறுதியாக இருக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை கட்டிடமாக அமைக்கப்படும். சூரிய ஒளி மூலம் 300 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். மழை நீர் வடிகால் மற்றும் மழை நீர் சேகரிப்பு திட்டமும் செயல்படுத்தப்படும். விமான நிலைய வளாகத்திலேயே பயணிகள் வாகனங்களில் வந்து செல்வதற்கு வசதியாக 4 வழிச்சாலை அமைக்கப்படும். ஒரே நேரத்தில் 1000 கார்களை நிறுத்த முடியும். புதிய முனையத்திற்கான மாதிரி வடிவமைப்பு சர்வதேச விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்பது பெருமைக்குரியதாகும்.

 

புதிய கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக வந்து செல்வதற்கான வசதிகள் செய்யப்படும். நெருக்கடி இன்றி பயணிகள் நிற்பதற்கும் இடம் ஒதுக்கப்படும். முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருக்கும். ‘கிரிகா’ எனப்படும் 4 நட்சத்திர அந்தஸ்துடன் புதிய முனைய கட்டிடம் கட்டப்படும்’’என்று கூறினார்.


 

சார்ந்த செய்திகள்