கேரளாவின் கொல்லம் நகரிலிருந்து நெல்லை வரும் பயணிகள் ரயில், ரயில்வே ஊழியர்களின் தீவிர உதவியால் பெரிய விபத்திலிருந்து தப்பியிருக்கிறது. நடக்கவிருந்த விபத்தும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை நகரிலிருந்து அருகிலுள்ள கேரளாவின் கொல்லம் வரையிலான மீட்டர்கேஜ் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு வழக்கமாகச் செல்லும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாகக் கொல்லத்திலிருந்து செங்கோட்டை வழியாக நெல்லைக்கும், செங்கோட்டையிலிருந்து கேரளாவின் புனலூருக்கும் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சில இடங்களில் மலைப்பாதை வழியாகவும் ரயில்வே பாதைகள் போடப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் கடந்த இரண்டு நாட்களாகக் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கனமழை பெய்திருக்கிறது. இதன் காரணமாகக் கேரளாவின் தென்மலைக்கும் எடமண் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட ரயில் பாதையில், அக். 11 அன்று இரவு இரவில், மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நடு இரவு ஒரு மணியளவில் கொல்லம் - நெல்லை பயணிகள் ரயில் எடமண்ணிலிருந்து தென்மலையை நோக்கி விரைந்து வந்திருக்கிறது. அதுசமயம் வேலையிலிருந்து திரும்பிய ரயில்வேயின் இருப்புப் பாதை ஊழியர்களான கேங்க்மேன்கள் அந்த மண் சரிவைக் கண்டு அதிர்ந்தவர்கள், தாமதிக்காமல் தென்மலை ரயில் நிலையத்திற்குத் தகவல் கொடுத்து புனலூர் செல்லும் ரயிலை நிலையத்திலேயே நிறுத்தச் சொல்ல, புனலூர் செல்லும் ரயில், ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து நடந்தவைகளை எடமண் ரயில் நிலையத்திற்குத் தெரியப்படுத்தி உடனே நெல்லை பயணிகள் ரயிலைச் செல்லவிடாமல் எடமண் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கச் சொல்லி ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ரயில் ஏற்கனவே நிலையத்திலிருந்து கிளம்பிவிட்டதாக ஸ்டேஷன் மாஸ்டர் தெரிவிக்க, பதறிப்போன ரயில்வே ஊழியர்கள் சமயோஜிதமாக ஒரு கிலோ மீட்டர் தொலைவு வேகமாக ஓடிச்சென்று எதிரே வருகிற ரயிலுக்கு ரெட் சிக்னல் போட்டு ரயிலை நிறுத்தியிருக்கிறார்கள். அதன் பிறகே நடக்கவிருந்த விபத்து ரயில்வே பணியாளர்களால் தவிர்க்கப்பட்டதையறிந்து அதிர்ந்திருக்கிறார்கள். அதன் பின்பு நெல்லை ரயில் பின்னோக்கி செலுத்தப்பட்டு எடமண் ரயில் நிலையத்தில் வந்து நின்றது. அதையடுத்து ஜே.சி.பிக்கள் வரவழைக்கப்பட்டு ரயில்பாதை சீரமைக்கப்பட்டு விடிந்தபின் காலை 7 மணியளவில் நெல்லை ரயில் 6 மணிநேரம் தாமதமாகக் கிளம்பியிருக்கிறது.
இதுகுறித்து நாம் மதுரை ரயில்வே கோட்ட பி.ஆர்.ஓ.வான ராதாவிடம் கேட்டதில், ''எடமண் இருப்புப் பாதை சீர் செய்யப்பட்டு ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. அந்த ரயிலில் பயணிகள் எத்தனை பேர் இருந்தார்கள் என்று தெரியாது'' என்கிறார்.
நடக்கவிருந்த ரயில் விபத்து ரயில்வே கடைநிலை பணியாளர்களின் அதிதீவிர நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டிருப்பது ஆரியங்காவு தென்மலைப் பகுதியை அதிரவைத்திருக்கிறது.