நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகில் உள்ள நத்தம் காலனியைச் சேர்ந்தவர் கண்ணனின் மகள் முன் உபானா (4), அதே காலனியைச் சேர்ந்த பச்சாத்து என்பவரின் மகன் சுதன்ராஜ் (இரண்டரை வயது), இவர்கள் இருவரும் அங்குள்ள பால்வாடியில் படிப்பவர்கள். கடந்த வெள்ளிக் கிழமையன்று காலை இவர்கள், அப்பகுதியைச் சேர்ந்த சில குழந்தைகளோடு வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அது சமயம் அங்கு குவிக்கப்பட்டுள்ள கழிவுகளில் கிடந்த ஈ கொல்லி மருந்து பாக்கெட்டை எடுத்திருக்கிறார்கள். அதிலிருந்து மிட்டாய் போன்ற வாசனை வரவே, அதை மிட்டாய் என்றெண்ணி சுதன்ராஜீம், உபானாவும் சாப்பிட்டிருக்கிறார்கள்.

சிறிது நேரத்தில் அழுதபடி மயங்கி விழுந்தார்கள். இது பற்றி தகவலறிந்து பதறியபடி வந்த பெற்றோர்கள், அருகிலுள்ள குழந்தைகளிடம் விசாரித்த போது, கீழே கிடந்த ஈ கொல்லி பாக்கெட் பொருளை சாப்பிட்டது தெரிய வந்தது. உடனே அவர்களை அம்பை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு, மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் சுதன்ராஜ் நேற்றிரவு பரிதாபமாக இறந்தான். சிறுமி உபானா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பாப்பாக்குடி போலீசார் கழிவு பொருட்களோடு ஈ கொல்லி மருந்து பாக்கெட்டை வீசியது யார்? என்ற விசாரணையிலிறங்கியுள்ளனர். இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் அடிப்படை விவசாய கூலி வேலை செய்பவர்கள். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.