கடந்த ஆகஸ்ட் 11 அன்று நெல்லை மாவட்டம் கடையம் நகரின் கல்யாணி புரத்திலிருக்கும் முதியவரான சண்முகவேலு (70) மற்றும் அவரது மனைவி செந்தாமரை (65) இருவரும் வீட்டிலிருந்த இரவு நேரம் இத்தம்பதியரின் மகன்கள் வெளிமாநிலத்தில் வேலையிலிருப்பதால் தம்பதியர் மட்டுமே காவல் நிலையம் அருகிலுள்ள தங்களது சிறிய தோட்டத்துடன் கூடிய வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இத்தருணத்தில் தான் மேற்படி தேதியன்று இரவு 9 மணியளவில் முகமூடி போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்த ஒருவன், சண்முகவேலுவின் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்குகிறான். கணவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து ஒடிவந்த செந்தாமரை அருகில் கிடந்த பிளாஸ்டிக் சேரைத் தூக்கி அவனை அடிக்க பிடி தளர்ந்ததும், செந்தாமரையை அவன் தாக்க முற்பட்ட போது சண்முகவேலும் சேரைத் தூக்கியடித்திருக்கிறார், இருவரும் எதிர்த்தது கண்டு பின் வாங்கிய முகமூடிக்காரன் தப்பி ஓடியிருக்கிறான்.
அவரது வீட்டில் பதிவான இந்த வீடியோ காட்சி வெளியானது. சமூகம் வலைத் தளங்களிலும் புகுந்த இந்தக் காட்சிகள் அதிர்வை கிளப்பின. வீடு புகுந்த கொள்ளையனை விரட்டிய வீரத்தம்பதியர் என்று டாப் போஸ்ட் பிரபலங்களான அமிதாப் பச்சன், கிரிக்கெட் ஹீரோ ஹர்பஜன்சிங்கும் பாராட்டினர். ஓவர் நைட்டில் நடந்த இந்த சம்பவம் மீடியா வெளிச்சமும் பெற்றது. உடனடியாக ஆக.15 சுதந்திரதின விழாவின் போது தம்பதியர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு முதல்வரால் கௌரவிக்கப்பட்டனர். இவைகள் ஏற்கனவே வெளியே வந்த விஷயங்கள்.
ஆனால் இத்தம்பதியரின் சம்பவத்தில் நடந்த பல விஷயங்கள் புரியாத புதிராகவும் மர்மமாகவும் உள்ளன என்று கடையம் நகரத்தில் கனமான பேச்சு ஓடிக் கொண்டிருக்கின்றது. அதற்கேற்ப, சம்பவம் நடந்து இரண்டு வாரங்களாகியும் இந்த வழக்கின் புலனாய்வில் ஒரு இன்ச் கூட முன்னேற்றமில்லையாம். ஆனாலும் சேலன்ஜ்சாகக் கருதும் போலீஸ், விசாரணையத் தீவிரமாக்கியிருக்கிறது.
சம்பவம் நடந்த உடன் முறைப்படி அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் தரப்படவில்லை. 32 மணி நேரம் கழித்தே புகார் தரப்பட்டு அதற்கான ஆதார சி.சி.டி.வி. பதிவுக் காட்சிகள் தரப்பட்டு, பின் அது வெளியே வைரலாகியிருக்கிறது. இத்தனை தாமதமான புகாருக்குக் காரணம் சொல்லப்படவில்லை. வீட்டில் 10க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் இருந்துள்ளன.
சம்பவம் நடந்த உடனே பெங்களூரிலுள்ள தன் மகனுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார் சண்முகவேல். நான் வரும் வரை சி.சி.டி.வி.யை தொடவேண்டாம் என்று சொன்னவர் மறு நாள் வந்து அவர் மூலம் அக்காட்சியோடு புகார் தரப்பட்டுள்ளது. ஆனால் போலீசாரின் ஆய்வின் போது வீட்டின் பின்புறமுள்ள சி.சி.டி.வி. உட்பட மற்ற சி.சி.டி.வி.கள் ஆப்ஃ ஆகியுள்ளது என்று சொல்லப்பட, செந்தாமரையின் கழுத்தில் கிடந்த 31 கிராம் செயின் அறுக்கப்பட்டுள்ளது என்ற புகாருக்கு சி.சி.வி. ஆதாரமும் இல்லை. மல்லுக்கட்டும் போது சண்முகவேலு கழுத்தில் போட்டிருந்த 4 பவுன் செயின் மீதும் கொள்ளையன் கை வைக்கவில்லை.
கொள்ளை, கொலை நோக்கமிருந்தால் வந்தவன் சண்முகவேலுவின் கழுத்தில் ஏன் துண்டால் இறுக்கியிருக்கிறான். ஆயுதத்தைப் பயன்படுத்தவுமில்லை. வீட்டிலிருந்த இரண்டு நாய்கள் சம்பவத்தின் போது குரைக்கவில்லை. அப்படி என்றால் வந்தவன் தெரிந்தவனாகத்தானே இருக்க முடியும். மேலும் காவலுக்கு எப்போதுமிருக்கிற இரண்டு நபர்களும் இருந்திருக்கிறார்கள். மீதமுள்ள சி.சி.டி.விக்களின் காட்சிகள் பதிவாகாத மர்மம் புலப்படவில்லை.
இது போன்று பல விடை தெரியாத மர்மங்களைக் கொண்ட இந்த சவாலான வழக்கின் புலன் விசாரணைப் போலீசார் நடப்பவைகளை ஷேடோ செய்து வருகின்றனர். விரைவில் சிக்குவான் என்கிறார்கள்.
வந்தவன் உறவுக்காரன் தான் என்ற பேச்சும் ஒடுகிறது. விடை தெரியாத சிந்துபாத் கதை மர்மமாகத் தானிருக்கிறது இந்தச் சம்பவம்.