இன்று (03.12.2021) சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ முதுகலை நீட் கலந்தாய்வினை விரைந்து முடித்திட வேண்டி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடந்த நான்கு நாட்களாக டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல மாநிலங்களில் உள்ள பிஜி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், சென்னையில் போராட்டத்தின்போது இரண்டாம் ஆண்டு பொதுநிலை மருத்துவ மாணவர் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “முதுகலை நீட் கலாந்தாய்வினை உடனே நடத்த வேண்டும் என வலியுறுத்தி நாங்கள் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம். கடந்த நான்கு நாட்களாக அகில இந்திய அளவில் டெல்லி, கொல்கத்தா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள பிஜி மருத்துவர்கள் அனைவரும் இதுபோன்ற ஸ்ட்ரைக்ல இருக்கிறோம். இதில் உள்ள பிஜி மருத்துவர்களாகிய நாங்கள் அனைவரும் புறநோயாளிகள் பிரிவுகளுக்குப் பணிகளுக்குச் செல்லாமல் இங்கிருக்கிறோம். இந்தக் கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிற காரணம் என்னவென்றால், நீட் பிஜி கலந்தாய்வு கடந்த ஒரு வருடமாக நடைபெறவில்லை.
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அந்த வழக்கை மேலும் தள்ளிவைத்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் இந்தியா முழுவதும் 60% மருத்துவர்கள் மட்டும்தான் பணியில் இருக்கிறார்கள். மீதம் உள்ள 40% மருத்துவர்கள் கடந்த ஓராண்டாக வரவில்லை. இதனால் இங்கு பணி செய்யும் மருத்துவர்களுக்குப் பணிச் சுமையும், மன அழுத்தமும் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்த 40% மருத்துவர்கள் பணிக்கு வந்தால் மட்டும்தான் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நலன் இன்னும் அதிகமாக கிடைக்கும். அதேபோல் இதனால் எந்தவிதத்திலும் அவசர சிகிச்சைப் பிரிவு பாதிக்கவில்லை.
எங்களுடைய கோரிக்கையே, இன்னும் ஒருவார காலத்தில் இந்தக் கலந்தாய்வினை போர்க்கால அடிப்படையில் விரைவாக நடத்தி, மாணவர்களைச் சேர்த்து, மருத்துவர்களின் பணிச்சுமையைக் குறைத்து மக்களுக்குக் கிடைக்கக் கூடிய ஹெல்த் கேர் குறையக் கூடாது என்பதுதான். அதுபோக இப்ப கரோன மூன்றாவது அலை வரக்கூடிய எல்லா அறிகுறிகளும் இருக்கிறது. அப்படி கரோனா மூன்றாவது அலை வந்தால் எவ்வளவுதான் ஐசியு, பெட் என தயார் செய்தாலும் பார்க்கிறதுக்கு மருத்துவர்கள் ரொம்ப ரொம்ப பற்றாக்குறையாக இருக்கும். அந்தப் பற்றாக்குறையை சரி செய்வதற்காகவாது இந்தக் கலாந்தாய்வினை வேகமாக நடத்தி மருத்துவர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை” என தெரிவித்தார்.