நீட் தேர்வு தொடர்ச்சியாக மாணவ, மாணவிகளைப் பலி வாங்கி வருகிறது. தகுதியற்ற இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது கல்வியாளர்கள், சமூகநீதி கொள்கையுடையவர்களின் கருத்து. ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பாராமுகம் காட்டி வருகிறது.
2021- ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12- ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 10,500- க்கும் அதிகமானவர்கள் தேர்வு எழுதினர். வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு- ருக்மணி தம்பதியின் 17 வயது மகள் சௌந்தர்யாவும் நீட் தேர்வு எழுதினார்.
நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் கடந்த செப்டம்பர் 13- ஆம் தேதி தனது வீட்டில் தனது தாயாரின் புடவையில் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களிடம் வேதனையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனது தொகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார் என்கிற தகவலைக் கேள்விப்பட்ட தமிழ்நாடு நீர்ப்பாசனம் மற்றும் கனிமம், சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், இறந்த மாணவியின் இல்லத்திற்குச் செப்டம்பர் 16- ஆம் தேதி அன்று நேரடியாகச் சென்றார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தந்தை, தாய் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அந்த குடும்பத்தாரின் அழுகை அங்கிருந்த அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் வரவைத்துவிட்டது. தி.மு.க.வின் பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகனுடன், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், வேலூர் மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் போன்றோரும் சென்று அந்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "நீட் என்ற அரக்கனை மத்திய அரசு ஏவிவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10- க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு எடுத்துள்ளது. இன்றைக்கு என்னுடைய தொகுதியில் இளம் தளிரைக் காவு எடுத்துள்ளது. அதனுடைய பசி என்றைக்குத் தீரும் என்று தெரியவில்லை. அது வெற்றி பெறும் வகையில் தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்று இல்லாவிட்டாலும் நாளை நீட் என்ற அரக்கனை தமிழ்நாடு அரசு அழிக்கும்.
இளம் தளிர்களுக்கு எனது வேண்டுகோள் மனம் தளர்ந்து விடக்கூடாது. ஒரு தேர்வில் தோல்வியடைந்தால் உலகம் மூழ்கிவிடாது. தேர்வும் உண்டு, உலகம் உண்டு என்பதை மாணவ செல்வங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். தயவு செய்து தவறான முடிவுகளை எடுக்காதீர்கள். நீட்டை எதிர்த்து நிற்போம். டெல்லியில் பஞ்சாப் விவசாயிகள் ஒரு வருடமாகப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தப் போராட்டத்தில் 100 விவசாயிகள் இறந்துள்ளார்கள். அவர்களுக்கு இறங்காத மத்திய அரசின் மனம், 10, 15 மாணவர்களுக்கு இறங்குமா எனத் தெரியவில்லை. ஆனால் இதற்கு நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முற்றுப்புள்ளி வைக்கும்" எனத் தெரிவித்தார்.