நாடு முழுவதும் ஏறத்தாழ 18 லட்சம் மாணவர்கள் 2022 ஆண்டிற்கான நீட் தேர்வை எழுதியிருந்த நிலையில் அதன் முடிவுகள் நேற்று வெளியானது. தமிழ்நாட்டிலிருந்து 1,32,167 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 51.3 சதவீத தேர்ச்சி பெற்றதன் மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வில் முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களில் இருவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்வில் தோல்வியடைந்த சென்னையை சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் அமுதா. கணவனை பிரிந்து வாழ்ந்துவரும் அமுதா அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக உள்ள நிலையில் அவரது மகள் லக்ஷா ஸ்வேதா பிலிப்பைன்ஸ் கல்வி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார். இருப்பினும் அதிக மதிப்பெண் எடுத்து இந்தியாவிலேயே மருத்துவம் பயில தொடர்ந்து முயற்சி செய்துவந்த லக்ஷா ஸ்வேதா இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு நீட் தேர்வு முடிவு வந்த நிலையில் அதில் தோல்வி அடைந்ததை அறிந்துகொண்ட லக்ஷா ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.