Skip to main content

நீட் தேர்வின்போது மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்றக் கூறும் நிபந்தனைகளுக்கு எதிரான வழக்கு! -மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

neet exam chennai high court national testing agency

 

 

நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம், ஆபரணங்களை அகற்றக்கூறும் நிபந்தனைகளை எதிர்த்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நாடு முழுவதும் 2017- ஆம் ஆண்டு முதல் மருத்துவ படிப்பகளுக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகள் ஆபரணங்கள் அணியக் கூடாது; பர்ஸ் வைத்திருக்கக்கூடாது; வாட்ச் அணியக்கூடாது என கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

 

இந்த கட்டுப்பாடுகள் காரணமாக, ஆணடுதோறும் மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அரவிந்த் ராஜ், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

அந்த மனுவில், நீட் தேர்வில் கலந்துகொள்ளும் திருமணமான விண்ணப்பதாரர்கள் புனிதமாகக் கருதும் தாலி, மெட்டி, காதணி மற்றும் மூக்குத்தி போன்றவற்றை அகற்றும்படி நிர்பந்திக்கப்படுகின்றனர். தேர்வறையில் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், ஆபரணங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது  என்பதால், இந்த நிபந்தனைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என அறிவிக்கவேண்டும். ஆபரணங்களை அகற்றும்படி, மாணவிகளை நிர்பந்திக்ககூடாது என்று உத்தரவிடவேண்டும் எனக் கோரியுள்ளார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய சுகாதாரத்துறை, மனித வள மேம்பாட்டு துறை, பொது சுகாதார சேவை இயக்குனர், தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது.

 

 

சார்ந்த செய்திகள்