சென்னை தியாகராயர் நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (04/02/2022) அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "நீட் என்பது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிரானது. நீட் என்பது அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிரானது. நீட் விலக்கு மசோதாவை நிராகரித்ததற்கான ஆளுநரின் பதிலை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். தமிழக ஆளுநர் எழுப்பிய கேள்விகள், அதற்கு தமிழக அரசின் பதிலை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பது ஏற்புடையது அல்ல.
நீட் தேர்வு தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்ததற்கு நன்றி. நாளைய அனைத்து கட்சிக் கண்துடைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விலகிக் கொள்கிறோம். அனைத்து கட்சிக் கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காது. நீட் தேர்வுதான் உண்மையான சமூக நீதிக்கான அடையாளம் என்பதை முதல்வர் இன்னுமா உணரவில்லை? மக்கள் நலனுக்காக முழு ஒத்துழைப்பு கொடுக்க தமிழக பா.ஜ.க. தயாராக உள்ளது. உண்மையும், நேர்மையும் இருக்க வேண்டும்; மக்களை ஏமாற்றும் பிரச்சனைகளுக்கு துணை நிற்க மாட்டோம்" எனத் தெரிவித்தார்.