கரோனா வைரஸை கட்டுப்படுத்த அதை முற்றிலும் ஒழிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் விழிப்புணர்வு பற்றியும் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அடுத்து சமூக ஊடகங்களில் ஏகப்பட்ட ஆலோசனைகள் பதிவிடப்படுகின்றன.
இந்த நிலையில் பழைய கால முறை பழக்க வழக்கங்களுக்கு கிராம மக்கள் மாறி வருகிறனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் நத்தாமூர், அருங்குருக்கை, குன்னத்தூர், புதூர், எலவாசனூர் கோட்டை, ஆனத்தூர், சின்ன சேலம் ஆகிய பகுதி கிராமங்களில் நேற்று இரவு முழுவதும் பெண்கள் தூங்காமல் வீட்டை கழுவி சுத்தம் செய்து வாசலில் சாணம் கரைத்து தெளித்து மெழுகி அதன் நடுவில் பசு மாடுகளின் கோமியத்தை பிடித்து அதில் மஞ்சள் குங்குமம் ஆசிய பொடிகளை கரைத்து கலசத்திற்குள் ஊற்றி அதில் வேப்பிலை சொருகி அவை நடுவில் வைத்து, அதன் அருகில் லட்சுமி விளக்கு குத்து விளக்கு ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். வீட்டுக்குள்ளும் இதேபோல் செய்துள்ளார்கள். வீடுகளின் கூரைகளில் வேப்பிலை சுருங்கியுள்ளனர்.
கடவுள் நம்பிக்கை மீது உள்ள காரணம் என்றாலும், இதன் மூலம் பொதுவாக கிருமிநாசினிகள் கட்டுப்படுத்தப்படும், ஒழிக்கப்படும் என்பதுகாலம் காலமாக கடைப்பிடித்து வந்த பழக்கம். நாகரீகம் என்ற பெயரில் செய்யலாம் மறந்து போனார்கள் பெண்கள். அதற்கு பதில் தண்ணீர் தெளித்து கோலம் போடும் பெண்கள் உண்டு.
இந்த திடீர் விழிப்புணர்ச்சி பல வீடுகளுக்குள் மாமியார் மருமகள் சண்டையை உருவாக்கியுள்ளது என்கிறார் குன்னத்தூரைச் சேர்ந்த இளைஞர் தம்பிதுரை. நேற்று இரவு முழுவதும் வீடுகளை கழுவி சுத்தம் செய்து விளக்கேற்றும் சம்பவம் நடைபெறும்போது, பல வீடுகளில் வீட்டு மருமகள்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது மாமியார்கள் மருமகள்களை பார்த்து எப்ப பாரு தூக்கம் தான். ஊரே உயிர் பயத்தில் முழிச்சிகிட்டு கோலம் போடுறாங்க, கழுவுகிறார்கள், விளக்கேற்றி வைக்கிறார்கள், இங்க பாரு மூதேவி மாதிரி தூங்குகிறார்கள் என்று சண்டை பிடித்து கொண்டனர். கரோனா பல குடும்பத்தில் சண்டையையும் உண்டு பண்ணியுள்ளது.
இது ஒரு பக்கம் என்றால் விழுப்புரம் மாவட்டத்தில் நகரங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பஸ்களின் வெளியிலும் உள்ளேயும் வேப்பிலைகளை கட்டி வைத்துள்ளனர். இதன்மூலம் பஸ் பயணிகளுக்கு கரோனா வைரஸ் தாக்குதல் வராது என்ற நம்பிக்கை. வேப்பிலை தோரணம். இது ஒரு மூலிகை. அது நோயை கட்டுப்படுத்தும் என்று நம்புகிறார்கள்.