அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் ஊசியை வயிற்றில் வைத்துத் தைத்தாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், அந்தப் பெண் பரிதாபமாகப் பலியானது தெரியவந்துள்ளது.
இலங்காரக்குடி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் இரண்டாவது பிரசவத்திற்காகத் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் லட்சுமி கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்ட போது அவருடைய வயிற்றில் உடைந்து போன ஊசியின் பாகம் இருப்பது தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் தஞ்சை அரசு மருத்துவமனைக்குத் தெரியவந்து ஆம்புலன்சை அனுப்பி வலுக்கட்டாயமாக லட்சுமியை அழைத்துச் சென்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதனைத் தொடர்ந்து லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லட்சுமியின் கணவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்துவதாகத் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி டீன் தெரிவித்துள்ளார்.