நீட் தேர்வு ஏராளமான மாணவ, மாணவாகளின் உயிரை பறித்துக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியானாலே பல பெற்றோர்கள் பதற்றமடைந்துவிடுகின்றனர். நீட் வேண்டாம் என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். ஆனாலும் எந்தப் பலனும் இல்லை. இந்த நிலையில் தான் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் நடந்துள்ளது.
பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி வெள்ளைச்சாமி- நாகூர் மாலா தம்பதியின் மகள் துளசி. பேராவூரணியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து 10- ஆம் வகுப்பில் 455 மதிப்பெண் பெற்ற துளசி, பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் +2 படித்து 421 மதிப்பெண் பெற்றார்.
தனது மருத்துவர் கனவை நனவாக்க திருச்சியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பணம் கட்டி நீட் பயிற்சி பெற்றவர் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால் தனக்கு மருத்துவர் சீட் கிடைக்காது என்ற நிலையில் வேறு படிப்பிற்காக முயற்சி செய்த போது தனது சானறிதழ்களை வாங்கி வைத்திருந்த தனியார் பயிற்சி மையம் பயிற்சிக் கட்டணம் பாக்கி உள்ளதாகக் கூறி சான்றிதழைக் கொடுக்க மறுத்த நிலையில் சனிக்கிழமை மதியம் பெற்றோர்கள் வெளியே சென்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மாணவி துளசி.
தகவல் அறிந்து பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், போலீசாரும் சென்றனர். முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல் கூறிச் சென்றார்.
இனியும் இப்படி குழந்தைகளை இழக்கக் கூடாது என்று பெற்றோர்கள் வலியுறுத்தி கதறுகின்றனர்.