மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., டி கே,ரங்கராஜன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், " நாடு முழுவதும் 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு என்படும் நீட் தேர்வுவிற்கான விண்ணப்பம் மார்ச் 9 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூபாய் 1400 பெறப்பட்டது.நீட் தேர்விற்காக 170 தேர்வு மையங்கள் அமைக்கபட்டிருந்தன.13 லட்சத்து 23 ஆயிரத்து 672 மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பித்தனர்.இதில் தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 24 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் வழி வினாத்தாளை தேர்வு செய்து தேர்வு எழுதினார்கள். நாடு முழுவதும் மே 6 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. மூன்று மணி நேரம் நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் உள்ளிட்ட மூன்று பாடப்பிரிவுகளில் இருந்து 180 வினாக்கள் கேட்கபட்டது.நான்கு விடைகள் அளிக்கபட்டு ஒரு சரியான விடையை தேர்ந்தெடுக்கும் முறையில் வினாத்தாள்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சிபிஎஸ்இ பாடத்தினை அடிப்படையாக கொண்டி நீட் தேர்வு வினாக்கள் இடம் பெற்றிருந்தன.ஆனால் தமிழகத்தில் சமச்சீர் கல்வி நடைமுறையில் உள்ளது.சிபிஎஸ்இ கல்வி முறை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் என்ற அமைப்பின் கல்வி முறையை பின்பற்றுகிறது. இதனால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு நீட் தேர்வு எளிமையாக இருந்தது. ஆனால் சமச்சீர் கல்வி முறையில் உள்ள இயற்பியல்,வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து நீட் தேர்வு வினாக்கள் பின்பற்றவில்லை.இதனால் தமிழக மாணவர்கள் நீட் தேர்விற்காக தனி கவனம் செலுத்தி புதிய பாடங்களை படித்தனர். இதனால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்விற்காக கோச்சிங் சென்டர்கள் சென்று அதிகளவில் பணம் செலுத்தி பயின்றனர்.
மே 6 ஆம் தேதி நடத்த நீட் தேர்வில் தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தது. தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத்தாளில் இயற்பியல் பாடப்பிரிவில் 10 வினாக்களும், வேதியியல் பாடப்பிரிவில் 6 வினாக்களும், உயிரியல் பாடப்பிரிவில் 33 வினாக்களும் தவறாக கேட்கப்பட்டிருந்தது.
குறிப்பாக வினா எண் 50,75,77,82 ஆகிய வினாக்கள் உள்பட 49 வினாக்கள் தவாறாக இருந்தது.இதனால் தமிழ் மொழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தமிழில் மொழிமாற்றம் செய்யபட்ட வினாதாளில் தவறாக கேட்கபட்டிருந்த 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும்.
இது தொடர்பாக மே 10 ஆம் தேதி சிபிஎஸ்இ மற்றும் முதல்வர் தனிபிரிவுக்கு புகார் அளித்தேன்.மேலும் எந்தெந்த வினாக்கள் தவறு என தனிதனியாக குறிப்பிட்டு பிரதமர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன்.49 வினாக்கள் தவறாக உள்ளது என புகார் அளிக்கபட்ட நிலையில் எனது மனுவை பரிசீலனை செய்யாமல் மே 24 ஆம் தேதி விடைதாள் வெளியிடபட்டது.
சரியான முறையில் தமிழில் மொழிமாற்றம் செய்யபடாமல் இருந்த வினாத்தாளால் தமிழ் வழி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறமுடியாமல் போக வாய்ப்புள்ளது.எனவே மே 6 ஆம் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தவறாக தமிழில் மொழிமாற்றம் செய்யபட்டிருந்த 49 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கி உத்தரவிட வேண்டும் அல்லது +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்,மேலும் நீட் தேர்வு முடிவுக்கு இடைகால தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் 6-ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இறுதி விசாரணையின் போது ,
நீட் வினா தாளில் தமிழில் மொழிமாற்றம் செய்த பகுதியில் அரிசியின் ரகம் என்பதற்கு பதிலாக அரிசியின் நகம் என தவறாக தமிழில் மொழிமாற்றம் செய்யபட்டு உள்ளது. மனித உடலில் நாளங்கள் என்பதற்கு பதிலாக நலன்கள் என தவறாக உள்ளது.
வௌவ்வால் என்பதற்கு பதிலாக அவ்வால் என உள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கபடுகின்றனர்.எனவே தமிழக மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்கி மறு தரவரிசை பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து மருத்துவ கவுன்சில் பரிந்துரையின் பேரில் மருத்துவ கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.நீட் தேர்விற்கு பெரும்பாலான வினாக்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து எடுத்து தான் வினாத்தாள் தயாரிக்கபடுகிறது என சிபிஎஸ்இயின் வாதம் முன்வைக்கபட்டிருந்தது.
அப்போது நீதிபதிகள் நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ வாரியம் தன்னிச்சையாக சர்வாதிகரமாக செயல்படுகிறது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் நீட் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் தேர்வு முடிவுகளை அவசரமாக வெளிட்டது ஏன் ?
பீகாரில் 35 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 37 ஆயிரம் மாணவர்களுக்கு தேர்வு முடிவை வெளியிட்டது எப்படி ? சிபிஎஸ்இ பாடதிட்டமும் சமச்சீர் கல்வி பாடதிட்டமும் வேறு வேறு,இரண்டையும் ஒன்றாக ஒப்பிட முடியுமா ?
என நீதிபதிகள் சிபிஎஸ்இக்கு கேள்வி எழுப்பினார்கள். மேலும் நீட் தேர்வில் வினாக்கள் தவறாக இருந்தாலும் பெரும்பான்மை அடிப்படையில் அந்த வினா சரியானது என முடிவெடுக்கபடுகிறது,நீர் தேர்வு வினாதாளில் தவறுகள் உள்ளது,இதில் எந்த சந்தேகமும் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு தீர்ப்பு இன்று வழங்கப்பட்டத்து அதில் நீட் தேர்வு தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவை நீதிபதிகள் பசீர் அகமது , சி.டி.செல்வம் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மருத்துவ படிப்புக்கு 2 வார காலத்தில் புதிய தர வரிசை பட்டியல் வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.