திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனியார் வங்கியிலிருந்து ரூ 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் -ல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஷோபனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற பாலாஜியை நிறுத்தி சோதனை செய்த போது அவருடைய பையில் வைத்திருந்த ரூ.14.54 லட்சம் பணம் இருப்பது கண்டறிந்தனர். அவர் எடுத்து சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அஜித்தா பேகத்திடம் ஒப்படைத்தனர்.
அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழு ஏ பறக்கும் படை அலுவலர் வினோதினி தலைமையில் சோதனை செய்த பொழுது, திருப்பத்தூர் அடுத்த திம்மனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் என்பவர் முறையான ஆவணம் இன்றி காரில் சுமார் 9,32,400 ரூபாய் ரொக்க பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் கடன் வாங்கிய நபரிடம் திரும்ப கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.
தேர்தல் விதிமுறைப்படி தனி நபர் ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாயை பறக்கும் படை அலுவலர் வினோதினி கருவூலத்தில் ஒப்படைக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் 23 லட்சத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.