நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து இந்த பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து வருமான வரித்துறை விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது எனத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நயினார் நாகேந்திரனை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக கட்டுக்கட்டாக கொண்டுசென்ற ரூ. 4 கோடி பணத்தை ரகசிய தகவலின்படி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது சம்பந்தமாக அவரது ஓட்டல் மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல், உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதற்காக இந்த பணம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமுறைகளை மீறுகின்ற செயலாகும். தேர்தல் ஆணையம் ஒரு மக்களவை தொகுதிக்குச் செலவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட தொகையான ரூ. 95 லட்சத்தை விட அதிகமான பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில் நயினார் நாகேந்திரன் மீது உரிய விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்துவதோடு அவர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என்று அறிவிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயகத்தை பணநாயகத்தின் மூலம் வெற்றிபெற்று விடலாம் என்கிற முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறது. ஏற்கனவே தேர்தல் பத்திர நன்கொடை மூலம் கார்ப்பரேட்டுகளிடம் நிதியை குவித்த பாஜக, பெரும் நிதியை தேர்தலில் செலவிட திட்டமிட்டிருப்பது ரூ. 4 கோடி சிக்கியது அம்பலப்படுத்தியுள்ளது. இத்தகைய ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடும் பாஜகவுக்குத் தமிழக மக்கள் உரிய பாடத்தை தேர்தலில் புகட்டவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.