திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஏற்றுமதிக்கான முருங்கை சாகுபடி மற்றும் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இதில், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு, அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த முருங்கையில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பல்வேறு பொருள்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் ஆட்சி காலத்தில் ரூபாய் 7,000 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. விவசாயிகளுக்கு மின் இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டன. அந்த வகையில், தற்போது ஆட்சி புரிந்து வரும் தமிழக முதலமைச்சர் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். வேளாண்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண் துறை மேம்படுவதற்கு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. முருங்கை அதிகளவில் சாகுபடி நடைபெறும், திண்டுக்கல், திருப்பூர், கரூர், அரியலூர், மதுரை, தேனி, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களை ஒருங்கிணைத்து முருங்கை ஏற்றுமதி மண்டலமாக தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
முருங்கையில் இரும்புச்சத்து உள்பட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் முருங்கைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே ஏற்றுமதிக்கான முருங்கை சாகுபடி தொழில்நுட்பங்களை அறிந்து அதிகளவில் விவசாயிகள் முருங்கை சாகுபடி பணிகளை மேற்கொள்ளவேண்டும்" என்று கூறினார்.