தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்க மாநில பேரவை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் வைரவன் தலைமை வகித்தார். அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வி, மாநில பொது செயலாளர் விஜயகுமார், உஷாராணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த கூட்டத்தில் தமிழக அரசு அடிப்படை ஊழியர்கள் விதிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மேனியூவல் படி சாலை பணியாளர்கள் 60 வயதில் ஓய்வு பெற ஆவணம் செய்ய வேண்டும். சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலமான 2002- ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2006- ஆம் ஆண்டு பிப்ரவரி வரை உள்ள 41 மாத பணி நீக்க காலத்தில் இறந்த சாலைப் பணியாளர்களின் குடும்பத்துக்கு விதிமுறைகளை தளர்த்தி வாரிசு பணி வழங்க வேண்டும்.
மேலும், ஓய்வூதிய பலன்களுக்கும், பணிக்கொடைக்கும் பொருந்தக் கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்குவது போலவே சாலைப் பணியாளர்களுக்கும் நிரந்தர ஊதிய பட்டியலில் இருந்து சம்பளம் வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விடுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகம் முழுவதிலும் இருந்தும் வந்திருந்த சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.