Skip to main content

சிப்காட் தொழிற்பேட்டையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்தது பசுமை தீர்ப்பாயம்!

Published on 07/03/2021 | Edited on 07/03/2021

 

national green tribunal southern zone order

கடலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை விரிவாக ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 1985- ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இந்த தொழிற்பேட்டையில் 30- க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்பேட்டைகளால் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து கடந்த 2014- ஆம் ஆண்டு தகவல் பெற்றனர். அதில், சிப்காட் வளாகத்தைச் சுற்றிலும் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மிக மோசமாக மாசடைந்துள்ளதாகத் தெரிய வந்தது.

 

இதையடுத்து, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 2015- ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடலூரைச் சேர்ந்த மீனவர் புகழேந்தி என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு கட்டத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த அறிக்கைகளில் சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றிலும், தொழில்பேட்டை உள்ளேயும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நிலத்தடி நீரில் குரோமியம், காட்மியம், போன்றவைகள் அளவுக்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

 

இந்த நிலையில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கத் தடை இருந்ததாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பசுமைத் தீர்ப்பாயம் அளித்த பல்வேறு உத்தரவுகளாலும் சிப்காட் தொழிற்பேட்டையில் சில கட்டுப்பாடுகளை தொழிற்சாலைகள் மேற்கொண்டன. இதனை காரணம் காட்டிய சிப்காட் நிறுவனம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளிலும், அப்பகுதியிலும் மேற்கொண்டு எந்த ஆய்வையும் அரசு மேற்கொள்ள வேண்டாம் என்றும், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறும் பசுமை தீர்ப்பாயத்திற்கு கோரிக்கை வைத்தன.

 

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (06/03/2021) விசாரணைக்கு வந்தபோது தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் தாஸ் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு இறுதி தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பில் "சிப்காட் மற்றும் தொழிற்சாலைகளின் கோரிக்கையை நிராகரித்து சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.

 

இந்த வல்லுநர் குழுவில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த விஞ்ஞானி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த விஞ்ஞானி, வேதியியல் வல்லுநர், தொழிற்சாலை மாசு குறித்த நிபுணத்துவம் பெற்ற ஒருவர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையை சேர்ந்த ஒரு மருத்துவர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இடம் பெறுவார்கள். 

 

இந்த வல்லுநர் குழுவானது சிப்காட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விரிவான ஆய்வை மேற்கொண்டு நிலத்தடி நீர் மற்றும் காற்று எந்த அளவுக்கு கன உலோகங்கள் போன்ற ரசாயனங்களால் பாதிக்கப்பட்டுள்ளது என்ற ஆய்வையும், இப்பகுதியை மீண்டும் பழைய நிலைக்கு வர செய்ய வேண்டிய செயல் திட்டத்தையும்,  மாசுப்பாட்டிற்கு காரணமாக, இருந்த தொழிற்சாலைகளில் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து ஆறு மாதத்திற்குள் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும்" என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

குறிப்பாக, சிப்காட் தொழிற்பேட்டை கடலூர் பகுதியில் துவங்குவதற்கு முன்பாக அப்பகுதியில் நிகழ்ந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கைக்கும், சிப்காட் தொழிற்பேட்டை செயல்படத் தொடங்கிய பின்னர் அப்பகுதியில் நிகழும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்