குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் பா.ஜ.க அரசு அந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. மாறாக சட்டத்தை நடைமுறைப்படுத்து என்று போட்டி போராட்டங்களை நடத்தி வருகிறது.
கேரளா போன்ற பலமாநிலங்களில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் கூட தமிழக அரசு அந்த சட்டத்தால் பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு சொல்கிறது என்று காரணம் சொல்லி சமாளித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.
ஆர்ப்பாட்டம், பேரணி, காத்திருப்பு போராட்டங்கள் நடத்தியும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்பதால் நூதனப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும், அனைத்து சமுதாய மக்களும் அச்சமின்றி அமைதியான வாழ்க்கை வாழ வழிவகை செய்ய வேண்டும், உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து அனைத்து நாடுகளும் மீளவும், இந்தியாவில் இதன் தாக்கம் வந்து விடக்கூடாது என இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் வகையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது போல, அதிகாலை 5 மணி முதல் மாலை 6.40 மணி வரை, உண்ணாமல், பருகாமல் நோன்பு நோற்றனர்.
இதையடுத்து, நோன்பு திறக்கும் (இஃப்தார்) நிகழ்ச்சி தொடர் போராட்ட அரங்கில் மாலை நடைபெற்றது. இதில், பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தேசிய தலைவர்கள் வேடமணிந்து சிறுவர்கள் பங்கேற்ற பேரணியில் நெஞ்சில் தேசிய கொடியை குத்திக் கொண்டு வாயில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக பதாகைகளை ஏற்திக் கொண்டு அமைதிப் பேரணி நடத்தினார்கள்.