திருச்சியில் இயங்கிவரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில், வாழையில் காவேரி, கல்கி, உதயம், காவேரி, காவேரி சுகந்தம், காவேரி ஹரிதா, மற்றும் காவிரி கன்னியா போன்ற ரகங்களை வெவ்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப பல ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த ரகங்கள் தற்போது உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு புரிந்துணர்வு திட்டங்களையும் வாழை ஆராய்ச்சி மேற்கொண்டு உள்ளது.
இந்திய மக்கள் தொகையில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளான வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் பயோ ஃபோர்டிபைய்டு ரகங்களை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான வாழைக் கன்றுகள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குறைந்த விலை வாழை கன்றுகளை உற்பத்தி செய்யும் கேளா விருத்தி என்ற தொழில் நுட்பத்தையும் நபார்டு வங்கியின் கூட்டு முயற்சியோடு செயல்படுத்தி வருகிறது.
ஆராய்ச்சிக் கூடங்களில் உள்ள தொழில் நுட்பங்கள் அவர்களை சென்றடையும் பொழுதும் அந்த தொழில் நுட்பங்களின் உள்ள வேறுபாடுகளை வயல்வெளிகளில் இருந்து ஆராய்ச்சிக் கூடத்திற்கு எடுத்து வருவதில் வேளாண் விரிவாக்க நோக்கமாகக் கொண்டு இந்த மையம் வேளாண் விரிவாக்க ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நிகழ்வுகளையும் முன்னெடுத்து வருகிறது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் அங்கமாக உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சிறந்த ஆராய்ச்சி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு அந்த போட்டியில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.
தேசிய அளவில் முதல் இடத்தைப் பிடித்த நிறுவனத்திற்கு உயர்ந்த விருதான சர்தார் பட்டேல் சிறந்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கான 2020 ஆம் ஆண்டிற்கான விருதை திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் பெற்றுள்ளது.
இந்த விருது குறித்து தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் முனைவர் உமா அவர்கள் கூறுகையில், “இந்தப் போட்டியானது கடந்த ஐந்து வருடங்களில் ஆராய்ச்சி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள அனைத்து வகையான பணிகள் மற்றும் மேம்பாடுகள் வளர்ச்சிகள் உள்ளிட்ட பலவற்றை ஆராய்ந்து அதில் சிறந்த நிறுவனமாக செயல்படக்கூடிய மையத்திற்கு இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகளை வாழை உற்பத்தியில் மேம்படுத்துவதற்கு அதிக முயற்சி எடுத்து சுமார் 4500க்கும் மேற்பட்ட ரகங்களை பாதுகாத்து பராமரித்து வரும் பணியை திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் கொண்டுள்ளது. இந்த முயற்சிக்காக கிடைத்த விருது” என்றார்.