பிரிக்க முடியாதது எதுவோ எனக் கேட்டால் ‘தமிழக கவர்னரும் சர்ச்சையும்’ என்று தாராளமாகச் சொல்லிவிடலாம் போல.
தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளோ, பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளோ நடைபெறும்போதும் நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். நிகழ்ச்சி முடியும்போது தேசியகீதம் இசைக்கப்படும். இது ஒரு மரபாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்திற்கு வந்தார் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி. ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் கல்லூரி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிகளை ஆரம்பித்தபோதும் நிறைவு செய்தபோதும் தேசியகீதம் இரண்டு தடவை பாடப்பட்டது. எப்படியென்றால், நிகழ்ச்சியின் துவக்கத்தில் தேசியகீதமும், அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி நிறைவுறும்போது தேசியகீதமும் பாடப்பட்டது. வழக்கத்துக்கு மாறான இந்த நடைமுறை, பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
திரையரங்குகளில் காட்சி துவங்குவதற்குமுன் தேசியகீதம் இசைக்கப்படுகிறது. காட்சி முடிந்தபிறகு திரையரங்கைவிட்டு அவசரமாக வெளியேறும் பார்வையாளர்களால், தேசியகீதத்துக்கு உரிய மரியாதை செலுத்தமுடியாமல் போய்விடும் என்ற காரணத்துக்காகவே, இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தை இரண்டாம் பட்சமாக்குவதற்கான புதிய உத்தியாக தேசிய கீதத்தை முதன்மைப்படுத்திய பின்னணியில் கவர்னர் இருக்கிறாரா? வேறு யாராவது இருக்கின்றனரா? திரையரங்க நடைமுறையை கவர்னர் நிகழ்ச்சிகளில் கொண்டுவந்தது எதனாலோ? யாரைத் திருப்திப்படுத்தவோ? எனக் கேள்வி எழுகிறது.