பல தமிழ்படங்களில் பட்டங்கள் படிக்காமலே போலி சான்றை அச்சடித்து விற்பனை செய்வதை காட்சியாக பார்த்து இருக்கிறோம். அந்த சம்பவங்களை உறுதிபடுத்தும் வகையில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் போலி மருத்துவ சான்றை தயார் செய்து கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் அரவகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் மருத்து இளங்கலை(எம்பிபிஎஸ்) பட்ட படிப்பு படித்தாக கூறி அவரிடம் உள்ள மருத்துவ சான்றிதழ்களை மருத்துவ மேற்படிப்பு படிப்பதற்காக டெல்லியிலுள்ள இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளார். மருத்துவ சான்றிதழ்களின் உண்மை தன்மையை அறிய மருத்துவ கவுன்சில் சம்பந்தபட்ட பல்கலைக்கழகத்திற்கு சான்றிதழ்களை அனுப்பியுள்ளது.
அதனைதொடர்ந்து ஜெயபாண்டி என்பவரின் மருத்துவ பட்டபடிப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்த பல்கலைகழக கே. பிரிவு (section) கணினி ஊழியர் தீபன், ஜெயபாண்டியின் மருத்துவ சான்றிதழ்கள் போலியானவை என்றும் மருத்துவ கல்லூரியில் இவர் படிக்கவில்லை என்று மருத்துவ கவுன்சிலுக்கு பதில் இ.மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.
இந்த விபரத்தை தெரிந்து கொண்ட ஜெயபாண்டி அண்ணாமலை பல்கலை கழகத்திற்கு வந்து சம்பந்தபட்ட ஊழியரான தீபன் (35) என்பரிடமும் அவருக்கு நெருக்கமான சில ஊழியர்களிடம் பல லட்சங்களையும் பார்டிகளை வைத்து சான்றிதழின் உண்மை தன்மையை மாற்றி அனுப்பி உதவுமாறு கூறியதாக பல்கலைக்கழக வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதன்படி கணினி அலுவலர் தீபன் மருத்துவ கல்லூரியில் படிக்காத ஜெயபாண்டிக்கு படித்தாக சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை தயார் செய்து மீண்டும் மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளார்.
இதனை பார்த்து சந்தேகம் அடைந்த மருத்து கவுன்சில் ஜெயபாண்டி மருத்துவ படிக்கவில்லை என்றும் அவரது சான்று போலி என்று தகவல் அனுப்பி விட்டு பின்பு ஒரு வாரம் கழித்து ஜெயபாண்டி மருத்துவ பட்டபடிப்பு படித்தாக மீண்டும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் அனுப்பியது சம்பந்தமாக மருத்துவ கவுன்சில் பல்கலைக்கழக துணைவேந்தர் மணியன், பதிவாளர்(பொறுப்பு) ஆறுமுகம் ஆகியோரை நேரிடையாக அழைத்து விளக்கம் கேட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய கால அவகாசம் கேட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பல்கலைகழக பதிவாளர்.ஆறுமுகம் பல்கலை கழக கே. செக்க்ஷன் அலுவலர்கள் மற்றும் சம்பந்தபட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கே. செக்க்ஷன் கணினி பிரிவு அலுவலர் தீபன் மற்றும் கணினி பிரிவு பொறுப்பாளர் உள்ளிட்ட சில ஊழியர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
பின்பு இச்சம்பவம் தொடர்பாக கணினி அலுவலர் தீபன் மீது பல்கலை கழக நிர்வாக தரப்பில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் அண்ணாமலை நகர் காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்து பல்கலைக்கழக ஊழியர் தீபனை தேடி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் பலலட்சகணக்கில் பணம் கைமாறியுள்ளது என்றும் மேலும் பல பல்கலைக்கழக அலுவலர்கள் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளை ஏற்று பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும் நோக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசின் முழுகட்டுபாட்டில் எடுத்து தனி அதிகாரிகளை நியமித்து பல்வேறு மாற்றங்களை செய்தார். ஆனால் அங்குள்ள ஊழியர்கள் சிலபேர் அவர்கள் செய்யும் புரோகர் தனம், கையாடல்,தேர்வில் வெற்றி பெற வைப்பது. சான்றிதழ்களுக்கு உண்மை தன்மையை மாற்றி கொடுத்து உள்ளிட்ட குற்றச்செயலுக்கு பணம் வாங்குவது போன்ற பல்வேறு முறைகேடுகளிலிருந்து அவர்களை மாற்றி கொள்ளாததால் பெருமைவாய்ந்த பல்கலைக்கழகத்தின் மாண்பு சீரழிவை நோக்கி செல்கிறது என்று கல்வியாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.