கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலை, சிட்னி அருங்காட்சியகத்திலிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்தச் சிலை, தமிழகம் வந்தடைந்துள்ளது.
கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலை, கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயிலிலிருந்து 1982-ம் ஆண்டு முதல் ஐந்துக்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் காணாமல் போயுள்ளன. அதன்பிறகு, இந்தச் சிலைகள் பலரது கைகளுக்கு மாறியுள்ளன. அதில், நடராஜர் சிலை கலைவண்ணத்தோடு இருந்ததால், வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. பின்னர், ஆகஸ்ட் 6, 2001 அன்று 225 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலையை வாங்கியுள்ளது, `ஆர்ட் கேலரி ஆஃப் செளத் ஆஸ்திரேலியா'.
அதை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில், `பொயட்ரி இன் ஸ்டோன்', ``இந்தியா ப்ரைட் ப்ராஜெக்ட்' உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் அருங்காட்சியகத்தில் இருப்பது இந்தியச் சிலை தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்தச் சிலை குறித்து இவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதன்பிறகு, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு இந்த வழக்கைக் கையில் எடுத்து விசாரித்தது. ``16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, 75.7 செ.மீ., உயரமுள்ள நடராஜர் சிலையை, அமெரிக்காவின் ஆலிவர் போர்ஜ் அண்டு பெரன்டன் லிங்க் என்ற நிறுவனத்திடமிருந்து ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் வாங்கியிருந்தது.
பாண்டிச்சேரி ப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் உதவியுடன் இது இந்தியச் சிலைதான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, 1982-ல் சிலை காணாமல்போனதும் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திடம் கொடுத்தனர்.
இதன்பிறகுதான், சிலையை மீட்க ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் துணைக் கமிஷனர் கார்த்திகேயன் மூலம், அருங்காட்சியகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து, நடராஜர் சிலை டெல்லி வந்தடைந்திருக்கிறது. தற்போது சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சிலை வந்தடைந்துள்ளது. விரைவில் கல்லிடைக்குறிச்சிக்கு எடுத்து செல்லப்பட இருக்கிறது.
இதுகுறித்துப் பேசும் தன்னார்வ அமைப்பினர், `` சிலையை மீட்டதோடு விட்டுவிடாமல், இந்தச் சிலை அமெரிக்க அருங்காட்சியகத்துக்கு எப்படிச் சென்றது என்பதை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். சிலைக் கடத்தலில் உள்ள சர்வதேச வலைப்பின்னலையும் வெளிக்கொண்டுவர வேண்டும். அப்போதுதான், இந்தச் சிலையோடு திருடுபோன மற்ற சிலைகளையும் மீட்டுக்கொண்டுவர முடியும்" என்கின்றனர்.