Skip to main content

நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது

Published on 11/12/2017 | Edited on 11/12/2017
நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது




நன்னிலத்தில்  ஒ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டம் நடத்திய பேராசிரியர் ஜெயராமன், அவரது மனைவி சித்ரா உள்ளிட்ட 19 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலப்பரப்பில் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்குழாய் எண்ணெய்க் கிணறுகளை அமைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதற்கு பொதுமக்களும் சமுக ஆர்வளர்களும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்வதோடு, போராட்டங்களையும் நடத்திவருகின்றனர்.
 
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளைக்குப்பத்தில் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் தனது பணியை துவங்கியது. அவர்கள் குழாய் அமைக்கும் பகுதியோ முன்று போகம் விளைச்சலைத் தரக்கூடிய பகுதி என்பதால் பொதுமக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியே வந்தனர். ஒ.என்.ஜி.சி.க்கு வரும் வாகனங்கள், குழாய்கள் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரிகளை தடுத்து நிறுத்திவைத்தனர். 

பிறகு நன்னிலம் காவல்துறை அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துவிட்டு, அவர்களின் பாதுகாப்போடு குழாய்களை கொண்டு சென்றனர். இந்நிலையில், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் அவரது மனைவி சித்ரா உள்ளிட்ட 19 பேர் இன்று காலை 10.30 மணிக்கு வாடகை காரில் நன்னிலம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை நன்னிலம் காவல்துறையினர் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

ஏற்கனவே தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஜீன் மாதம் விளைநிலங்களில் ஒ.என்.ஜி.சி. பதித்துள்ள குழாய்கள் வெடித்து ஆயில் வெளியேறியதால் போராட்டம் தீவிரமானது. அந்தப் போராட்டத்தை தலைமை தாங்கியதால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் 45 நாட்கள் சிறையில் இருந்த பேராசிரியர் ஜெயராமன் பிறகு ஜாமினில் விடுதலையானார்.

அதன்பின்னர் இந்திய தேசிய ஒற்றுமைக்கு எதிராக புத்தகம் எழுதி வெளியிட்டதற்காக அவர் மீது தேசதுரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், திருவாரூரில் ஒ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பேராசிரியர் ஜெயராமன் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

- க.செல்வகுமார்.

சார்ந்த செய்திகள்