நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட மூலக்கரைப்பட்டி அருகிலுள்ள அம்பலம் கிராமத்தில் திமுகவை சேர்ந்த பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் சரவணகுமார் தங்கியிருந்த பகுதியில் அங்குள்ள மக்களுக்கு ரூபாய் 2000 வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் அம்பலம் கிராமத்தை சேர்ந்த மக்கள் எம்.எல்.ஏவை முற்றுகையிட்டு, அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதனையடுத்து சம்மந்தப்பட்ட பகுதிக்கு விரைந்த தேர்தல் அதிகாரிகள் ரூபாய் 2.78 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் நெல்லை மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளை தாக்கி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்ததாக அம்பலம் கிராமத்தினர் 24 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பறக்கும் படை அதிகாரி ஜனார்த்தனன் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உட்பட 7 மீது முறைகேடாக பணம் வைத்திருந்ததாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நேற்று இரவு அந்தவீடு மற்றும் காரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் வேறு பணம் எதுவும் சிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.