
தமிழர்களின் திருநாளான காணும் பொங்கலையொட்டி, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலம் கிராமத்தில் செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் மற்றும் தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் மரபு விதைகளுக்காகவும், மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த இயற்கை வாழ்வியல் அறிஞர் கோ.நம்மாழ்வார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் அறுவடைத் திருவிழா இயற்கை விவசாயிகள் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் அறுவடைக்காலத்தில் மழையின் குறுக்கீடுகளால் உழவர்கள் பல சிரமத்திற்கு ஆளாகி உள்ள சூழலில், விவசாயிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாகவும், சூழ்நிலைகளைச் செம்மைப்படுத்தவும், சுயச்சார்போடு வாழவைக்கவும், ஆர்வமாக உள்ளவர்கள் நெல் அறுவடையில் பங்குபெற்று அறுவடை திருவிழாவைச் சிறப்பிக்கும் நோக்கில் இத்திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, ஆத்தூர் கிச்சலி சம்பா, இலுப்பைப்பூ சம்பா, காட்டுயானம், தூயமல்லி, சீரகச் சம்பா உள்ளிட்ட நெற்பயிர்கள், முக்கனிகள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தோட்டப்பயிர்கள் உள்ளிட்டவை கண்காட்சிக்காக வைக்கப்பட்டன.
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கோட்டேரி சிவக்குமார் வரவேற்புரை வழங்கினார். செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளர் முருகன்குடி கரும்பு கண்ணதாசன் தலைமை தாங்கினார்.
மரக்கன்று வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக, தானாக முளைத்த 1000 புங்கன் கன்றுகளைப் பைகளில் வளர்க்கும் நிகழ்வை கவிஞர் அறிவுமதி கன்று நட்டு துவக்கி வைத்தார்.
தமிழக உழவர் முன்னணி முருகன்குடி முருகன், இயற்கை வேளாண் ஆர்வலரும் ஏ.கே அறக்கட்டளை நிறுவனருமான வழக்கறிஞர் அகிலன் ஆகியோர் இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்தும், இயற்கை உணவுகளின் பயன்கள் குறித்தும் விளக்கிப் பேசினர்.
ஏராளமான இயற்கை விவசாயிகள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் மாப்பிள்ளை சம்பா அரிசியில் செய்த மூலிகை கஞ்சியும், அவல் பொங்கலும் பரிமாறப்பட்டது.
நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் தமிழ்க்காடு துணிப்பை இயக்கம் சார்பாக துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.