அரியலூர் மாவட்டம், திருமானூர் பேருந்து நிலையத்தில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விழாவில், மன்னர்கள் மட்டுமே சாப்பிட்ட பாரம்பரிய அரிசி ரகமான கருப்புக் கவுனி அரிசியில் கஞ்சி செய்து பொது மக்களுக்கு நேற்று (30-12-20) வழங்கப்பட்டது.
கருப்புக் கவுனி அரிசி இரத்த அழுத்தம், உடல்வலி, சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவற்றை குணமாக்கும் மருத்துவ குணமுடையதாகும். ஒவ்வொருவரும் இயற்கை விவசாயத்தில் விளைந்த நெல் ரகங்களைப் பயன்படுத்த வேண்டும் என கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம், டெல்டா இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சச்சிதானந்தம், ஓவிய ஆசிரியர் மாரியப்பன், இயற்கை ஆர்வலர்கள் சண்முகம், இராபர்ட், சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் சுயம்பிரகாசன், தஞ்சை மாவட்ட டெல்டா இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் வெங்கடேசுவரன், பாபுசங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், இதனை எப்படி செய்யவேண்டும் என்றும் அவ்விழாவில் பகிர்ந்துகொண்டனர். கருப்புக் கவுனி அரிசியை உடைத்து இரவே ஊறவைத்து இஞ்சி, பூண்டு, மிளகு, புதினா, மல்லி, உப்பு ஆகியவற்றைக் கலந்து கஞ்சி செய்தும், எலுமிச்சை சாறு, இயற்கை விவசாயத்தில் விளைந்த வெல்லம், ஏலக்காய், இஞ்சி சாறு கலந்து தயாரிக்கப்பட்ட பானகமாகவும் செய்யலாம் என்றனர்.