
எம்.பி.பி.எஸ் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி மோகனபிரபா, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தகுதித்தேர்வு கடந்த செப். 13ஆம் தேதி நடந்தது. தேர்வு முடிவுகள் அக். 25ம் தேதி வெளியிடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்த மாணவி மோகனபிரபா, 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று, இந்திய அளவில் 52 -ஆவது இடமும், தமிழக அளவில் 2ஆம் இடமும் பிடித்துச் சாதனை படைத்தார்.
இந்நிலையில், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திங்களன்று (நவ. 16) வெளியிட்டார். இந்தப் பட்டியலிலும் நாமக்கல் மாணவி மோகனபிரபா இரண்டாம் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து மோகனபிரபா கூறுகையில், ''நீட் தேர்விலும், தற்போதைய தர வரிசைப் பட்டியலிலும் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் காலத்தில் நரம்பியல் மருத்துவராக மக்களுக்குச் சேவை செய்வதே லட்சியம். நரம்பியல் துறையில் போதுமான அளவில் மருத்துவர்கள் இல்லை. அதனால் அத்துறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்'' என்றார். மாணவியின் தந்தை ரவிச்சந்திரன், தாயார் சுமித்ரா ஆகியோர் பெங்களூருவில் கணினி பொறியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.