Skip to main content

நாமக்கல்: லஞ்ச வழக்கில் கைதான தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்!

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

 


திருச்செங்கோடு அருகே லஞ்சம் வாங்கியதாக கைதான அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

t


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, மலை அடிவாரத்தில் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் சந்திரசேகர் என்பவருக்கு ஏழு மாத சம்பளத் தொகை 3.21 லட்சம் ரூபாய் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. திருச்செங்கோடு வட்டாரக் கல்வி அலுவலருக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக நிலுவை சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சந்திரசேகரிடம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் கூறியுள்ளார். 


இதைக்கேட்ட ஆசிரியர் சந்திரசேகர், 5000 ரூபாய் தர ஒப்புக்கொண்டார். ஆனால் இதுகுறித்து அவர் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனைப்படி, கடந்த பிப். 18ம் தேதி ஆசிரியர் சந்திரசேகர், தலைமை ஆசிரியர் செந்தில்குமாரிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட 5000 ரூபாய் லஞ்சப்பணத்தைக் கொடுத்தார்.


அப்போது ஏற்கனவே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் தலைமை ஆசிரியரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பள்ளி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் செந்தில்குமாரை பணியிடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்