நாமக்கல் அருகே, மாணவிகளுக்கு ஆபாசப்படம் காட்டி பாடம் நடத்தியதாக எழுந்த புகாரின்பேரில் அரசுப்பள்ளி ஆசிரியர் மீது,குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கக்கூடிய போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கொங்களம்மன் கோயில் அரசு நடுநிலைப்பள்ளியில் சுரேஷ் (37) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 8ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாசப்படங்களைக் காட்டி பாடம் நடத்தியதாகவும், சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து ஆசிரியர் சுரேஷ் மீது 8 மாணவிகள் எழுத்து மூலம் புகார் அளித்தனர். அதன்பேரில், சுரேஷை, மாவட்டக் கல்வி அலுவலர் உதயகுமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா, கொங்களம்மன் கோயில் அரசு நடுநிலைப்பள்ளியில் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மாணவிகள், தலைமை ஆசிரியர் மாதையன், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் கவுரி, திலகவதி ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், மாணவிகளின் பெற்றோர் தரப்பிலிருந்து, ராசிபுரம் மகளிர் காவல்நிலையத்தில் சுரேஷ் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் இந்திரா, ஆசிரியர் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.
இதற்கிடையே, தனக்கு திடீரென்று உடல்நலம் சரியில்லை என்றுகூறி சுரேஷ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனத்தெரிகிறது.