நாமக்கல் அருகே, ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையில் இருந்து மீள்வதற்காக தீயணைப்பு நிலைய வீரர் ஒருவரே, வயதான கணவன், மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, நகைகளைக் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம் குச்சிக்காடு தோட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (70). இவர், மோகனூர் சர்க்கரை ஆலையில் காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி நல்லம்மாள் என்கிற சின்ன பிள்ளை (65). இவர்களுக்கு இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதையடுத்து நல்லம்மாளும், சண்முகமும் தனியாக வீட்டில் வசித்து வந்தனர். கடந்த அக். 10ம் தேதி இரவு, சண்முகத்தின் வீட்டிற்கு முன்பும், வீட்டிற்குச் செல்லும் பாதையிலும் மர்ம நபர்கள் மிளகாய் பொடியைத் தூவிவிட்டு, பின்பக்கம் இருந்த தண்ணீர்க் குழாயை உடைத்துவிட்டுச் சென்றனர்.
இதையறிந்த சண்முகம், தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், அதனால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பரமத்தி வேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதன்பேரில், காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், அக். 11ம் தேதி இரவு, சண்முகத்தின் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள், திருட முயன்றுள்ளனர். தூக்கத்தில் இருந்த நல்லம்மாள், ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார். மர்ம நபர் ஒருவர் நடமாடுவதைப் பார்த்து அவர் கூச்சல் போட்டார். உடனடியாக அந்த நபர், கையில் வைத்திருந்த கடப்பாரையால் நல்லம்மாளை தாக்கினார். இந்த சத்தம் கேட்டு எழுந்த சண்முகத்தையும் அதே கடப்பாரையால் மர்ம நபர் தாக்கியுள்ளார்.
பின்னர் அந்த நபர், வீட்டு பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு, வீட்டில் இருந்த பூட்டை எடுத்து வெளிக்கதவை பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதற்கு அடுத்த நாளான அக். 12ம் தேதி காலை, தம்பதிகள் இருவரும் நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், அந்த வீட்டுக்குள் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தம்பதியினர் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தது தெரிய வந்தது.
அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். காவல்துறையினர் வந்து பார்த்தபோது, நல்லம்மாள் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. அதேநேரம், சண்முகம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததால் அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்லம்மாளின் சடலம், உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, சண்முகத்தை மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாவட்டக் காவல்துறை எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், 2 ஏ.டி.எஸ்.பி., 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். சந்தேகத்தின் பேரில், குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஜனார்த்தனன் (32) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அவர்தான் நல்லம்மாள், சண்முகம் ஆகியோரை கடப்பாரையால் அடித்துக் கொன்றுவிட்டு, வீட்டில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றவர் என்பது தெரிய வந்தது.
அவர், நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராகப் பணியாற்றி வருவதும், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடன்காரர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தருவதற்காக வயதான தம்பதியின் வீட்டில் நுழைந்து நகைகளை கொள்ளையடித்ததும், அவர்கள் நேரில் பார்த்து விட்டதால் அடித்துக் கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்பதும் தெரிகிறது. இதையே அவர் காவல்துறையில் வாக்குமூலமாகவும் அளித்துள்ளார்.
இதையடுத்து ஜனார்த்தனனை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். ஆன்லைன் சூதாட்டம் பலரை தற்கொலைக்குத் தள்ளிய நிலையில், நாமக்கல் அருகே கொலை செய்யவும் தூண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.