தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று அபாயம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், நோய்த்தொற்றின் வேகம் படிப்படியாக கட்டுக்குள் வந்ததோடு, தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன.
இதையடுத்து செப். 1ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், 50 சதவீத மாணவர்கள் மட்டும் தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 367 அரசு, தனியார், நிதியுதவி பெறும் பள்ளிகளும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்துவரும் மாணவிக்கு, செப். 1ஆம் தேதி இரவு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, எலச்சிப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் கருணாகரன் தலைமையில் பள்ளிக்குச் சென்ற குழுவினர், அனைத்து மாணவிகள், ஆசிரியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
நோய்த் தொற்றுக்கு உள்ளான மாணவி படித்துவந்த வகுப்பறை மூடப்பட்டது. அவருடன் படித்துவரும் மற்ற மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். பள்ளி வளாகம் முழுவதும் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. கிருமிநாசினி மருந்தும் அடிக்கப்பட்டது. மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன் பள்ளியில் நேரில் ஆய்வு செய்தார். இச்சம்பவத்தால் அப்பள்ளியில் படித்துவரும் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.