நாமக்கல் அருகே, கடனைத் திருப்பிச் செலுத்தாத வாலிபரை, கத்தியால் குத்திக்கொன்று விட்டு, சடலத்தை வீட்டு நிலத்தில் புதைத்த இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் தினேஷ் (35). மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய நண்பர் நரேஷ்குமார் (35). நாமக்கல் ஆண்டவர் நகரில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நரேஷ்குமார் நண்பர் தினேஷிடம் வட்டிக்கு 30 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததாகவும், அவர் முறையாக கடன் அசல், வட்டியைச் செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 2- ஆம் தேதி, நரேஷ்குமார் வீட்டுக்குச் சென்ற தினேஷ், அவரை வெளியே ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று தன்னிடம் வாங்கிய கடனை திருப்பித் தரும்படி கூறியிருக்கிறார். அதற்கு நரேஷ்குமார், கடன் வாங்கிய பணத்தை, தான் வேறு சில நபர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்ததாகவும், அவர்கள் சொன்னபடி தராததால், தன்னால் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் சொல்வது எல்லாம் உண்மைதானா எனச் சந்தேகம் அடைந்த தினேஷ், யார் யாருக்கு நரேஷ்குமார் கடன் கொடுத்தார் என்று குறிப்பிட்டாரோ அவர்களிடம் நேரிடையாகச் சென்று கேட்டுள்ளார். அப்போதும் தினேஷூக்குத் தன்னுடைய பணம் வசூலாகவில்லை. இதையடுத்து கடந்த 4- ஆம் தேதி, நரேஷ்குமாரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற தினேஷ், அவருக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளார். இருவரும் மது குடித்துள்ளனர். போதையில் இருந்த அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரம் அடைந்த தினேஷ், திடீரென்று நரேஷ்குமாரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் தன் நண்பர்கள் உதவியுடன் நரேஷ்குமாரின் சடலத்தைக் காரில் கொண்டு சென்று மறைக்க முயற்சி செய்துள்ளார். அந்த முயற்சிகள் பலனளிக்காமல் போகவே, வேறு வழியின்றி தன் வீட்டுக்குப் பின்பகுதியில் உள்ள நிலத்தில் ஆழமாகக் குழி தோண்டி சடலத்தைப் புதைத்து உள்ளனர்.
இதற்கிடையே, நரேஷ்குமார் வீட்டை விட்டுச்சென்று நான்கு நாள்களாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர், இதுகுறித்து தினேஷிடம் விசாரித்துள்ளனர். அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால், இதுகுறித்து அவர்கள் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல் ஆய்வாளர் செல்வராஜ், எஸ்.ஐ. பூபதி மற்றும் காவலர்கள் தினேஷ் வீட்டுக்குச் சென்று நேரில் விசாரித்தனர். நரேஷ்குமாரை கொலை செய்து, வீட்டு பின்பக்கத்தில் புதைத்து விட்டதாகக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்து போன காவல்துறையினர், சடலம் புதைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்தை மீண்டும் தோண்டிப் பார்த்தனர். அங்கே நரேஷ்குமாரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தினேஷை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக தினேஷின் நண்பர்கள் அஜித்குமார் (22), மதன்ராஜ் (25), ஆட்டோ ஓட்டுநர் வடிவேல் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நாமக்கல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.