நாமக்கல் மாவட்டத்தில் ஆறு நாள்களாக புதிதாக கரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது ஒரே நாளில் இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 15 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 28- ஆம் தேதி வரை 61 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருந்து வந்தது. இவர்களில் 50 பேர் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து, வீடு திரும்பினர். 7 பேர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 4 பேர் சேலம் அரசு மருத்துவமனையிலும் தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 6 நாள்களாக நாமக்கல் மாவட்டத்தில் யாருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக மாவட்டம் முழுவதும் 14 சோதனைச்சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வந்த லாரி ஓட்டுநர்கள், சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு என மொத்தம் 270 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சோதனைச்சாவடி அருகில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 3) பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 15 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது திங்கள்கிழமை (மே 4) உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் 2 பேர் கர்ப்பிணிப் பெண்கள். மற்ற 13 பேரும் ரெட்டிப்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிப்பாளையம், திம்மநாயக்கன்பட்டி, ரெட்டிப்புதூர், வெடியரம்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளான 15 பேரும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து திங்களன்று இரவு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட இரு பெண்கள் தவிர மற்ற 13 பேரும் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். தொடர் சிகச்சைக்காக அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டதுடன், தடுப்புக் கட்டைகள் வைத்தும் மூடப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 51 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 12 கிராமங்கள் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போது ஒரே நாளில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, ஊரடங்கு தளர்த்தப்பட்டு தனிநபர் கடைகள், முழு நேர உணவகங்கள், செல்போன் கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளதால், சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இது மேலும் நோய்த்தொற்றை அதிகரிக்கச் செய்யுமோ என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.