Skip to main content

கஞ்சா வியாபாரியிடம் லஞ்ச வேட்டை! சேலம் போலீஸ் டிஎஸ்பி, பெண் ஆய்வாளர் சிக்கினர்!!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 

நாமக்கல்லைச் சேர்ந்த பெண் கஞ்சா வியாபாரியிடம் லஞ்ச வேட்டையாடியதாக சேலம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி குமார், பெண் ஆய்வாளர் சாந்தா உள்ளிட்ட மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

d

 

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கான போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) அலுவலகம் சேலம் குரங்குசாவடியில் செயல்பட்டு வருகிறது. இப்பிரிவின் டிஎஸ்பியாக நாமக்கல்லைச் சேர்ந்த குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.


இவர் மீது திருச்செங்கோட்டை சேர்ந்த ராணி என்கிற கஞ்சா வியாபாரி அளித்த புகாரின்பேரில், சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் டிஎஸ்பி குமார், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பெண் ஆய்வாளர் சாந்தா, தஞ்சாவூர் கருவூலக அலுவலக கண்காணிப்பாளர் சிபிச்சக்கரவர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


அரசு ஊழியர்கள், காவல்துறையினர் யாரிடமாவது லஞ்சம் பெறுவதெனில் நேரடியாகவோ அல்லது தங்களது வாகன ஓட்டுநர் மூலமாகவோ பெறுவார்கள். ஆனால், டிஎஸ்பி குமார் லஞ்ச வேட்டையாடுவதில் நூதன உத்தியைக் கையாண்டு வந்துள்ளார்.


கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்கும் கும்பலை கைது செய்யாமல் இருக்க, அவர்களிடம் இருந்து மாதந்தோறும் லஞ்சம் வசூலித்து வந்துள்ளார் டிஎஸ்பி குமார். இதற்காக அவர், தஞ்சாவூரில் கருவூலகத்துறை ஊழியராக உள்ள தனது மைத்துனர் சிபிச்சக்கரவத்தி மூலமாக அவர் பெயரில் பிரத்யேக வங்கிக்கணக்கு ஒன்றைத் துவங்கியுள்ளார். கஞ்சா வியாபாரிகள் மாமூல் பணத்தை அந்த வங்கிக் கணக்கில் மாதந்தோறும் செலுத்தி வந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அந்த வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டு இருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இது தொடர்பாக நாம் லஞ்ச ஒ-ழிப்புப்பிரிவு காவல்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.


''புகார்தாரர் ராணியின் கணவர் பெயரும் குமார்தான். அவர் பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனை செய்து வருகிறார். இவரை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


அவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். குமார் சிறையில் அடைக்கப்பட்டதால், அவருடைய குடும்பம் கடும் நெருக்கடிக்கு ஆளானது. தனது கணவரை விடுவிக்கும்படி ராணி அடிக்கடி டிஎஸ்பி குமாரிடம் நேரில் சந்தித்து கெஞ்சினார். 


அப்போதுதான் டிஎஸ்பி குமார், எந்த காவல்துறையினரும் சொல்லக்கூடாது ஒரு அறிவுரையை ராணியிடம் கூறியிருக்கிறார். அதாவது, 'உன் புருஷன் செய்த கஞ்சா தொழிலை நீ செய்தால் நீ மட்டுமின்றி நாங்களும் நன்றாக இருப்போம்,' என்று சொல்லியுள்ளார். ஆனால் தனக்கு கஞ்சா விற்பனை செய்யத் தெரியாது என்று மறுத்துள்ளார். 


அதன்பிறகும் விடாமல் ராணியை கஞ்சா விற்கும்படி தூண்டியதுடன், எப்படியெல்லாம் விற்கலாம் என்றும் சொல்லிக் கொடுத்துள்ளார் டிஎஸ்பி குமார். இதனால் வேறு வழியில்லாமல் கஞ்சா விற்பனையில் இறங்கினார் ராணி. ஆந்திராவில் இருந்து வரும் கஞ்சா பொட்டலங்களை நாமக்கல், சேலம் பகுதிகளில் சிறு வியாபாரிகளுக்கு கைமாற்றி விடும் வேலையைச் செய்து வந்துள்ளார் ராணி. அதன்மூலம் கிடைத்த தொகையை வைத்துக்கொண்டு டிஎஸ்பிக்கு மாதந்தோறும் மாமூல் கொடுத்து வந்தார். 


திடீரென்று சில மாதங்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை டிஎஸ்பி குமார் ராணியிடம் மாமூல் வசூலித்துள்ளார். ஆனால் தன்னால் மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க முடியாது என ராணி மறுத்ததால், பின்னர் மாதம் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் என்று டிஎஸ்பி குமார் இறங்கி வந்தார். அந்தப்பணத்தை தஞ்சையில் உள்ள தனது மைத்துனரின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார்.


அதுமட்டுமின்றி, சேலம் மாவட்டம் வேம்படிதாளம், இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி மற்றும் நான்கு மாவட்டங்களில் உள்ள கஞ்சா வியாபாரிகளிடமும் மாமூல் வேட்டையாடியாடி இருக்கிறார். 


இந்நிலையில் ஆந்திராவில் ராணிக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த வியாபாரி ஒருவர் 3 லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு தலைமறைவானார். அதனால் ராணிக்கு தொழில் சுத்தமாக முடங்கிப்போனது.


இதனால் ராணி தனது நான்கு குழந்தைகளையும் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, ஆந்திராவுக்கு ஓடிவிட்டார். நீ மறுபடியும் சொந்த ஊருக்கு வந்து கஞ்சா வியாபாரம் செய்யவில்லை என்றால், உன்னுடைய அண்ணன் பழனிசாமி, தாயார் ஆகியோரை கைது செய்வோம் என மிரட்டியுள்ளார். சொன்னதோடு நிற்காமல், ராணியின் தாயார் இரண்டரை கிலோ கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி, அவரை கைது செய்து சிறையில் அடைத்தார். 


இதையடுத்து ஆந்திராவில் சேலம் வந்த ராணி, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையில் டிஎஸ்பி குமாரின் லஞ்ச வேட்டை குறித்து புகார் அளித்தார். அதன்பிறகே, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.


இந்த வழக்கில் இருந்து டிஎஸ்பி குமார் தப்பிக்க வழிகளே இல்லை என்ற லஞ்ச ஒழிப்புப்பிரிவினர், அவருடைய மைத்துனரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு இருப்பது முக்கிய ஆதாரமாக கருதுகின்றனர். விரைவில் டிஎஸ்பி குமார் பணியிடைநீக்கம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது. 


இந்த வழக்கில் மற்றொரு காவல்துறை அதிகாரியான ஆய்வாளர் சாந்தா, தற்போது நெல்லையில் பணியாற்றி வருகிறார். ராணி கூறிய சம்பவம் 2017 முதல் 2019 வரை நடந்தவை. இதற்கிடையே சாந்தா, சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சென்ற சிறிது காலத்திலேயே அவர் மீது இதேபோன்ற வசூல் புகார்கள் கிளம்பியதால், அவர் நெல்லைக்கு மாற்றப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. சாந்தா மற்றும் தஞ்சாவூரில் உள்ள சிபிச்சக்கவர்த்தி ஆகியோரிடமும் விரைவில் விரிவான விசாரணை நடத்தப்படும் எனத்தெரிகிறது.

சார்ந்த செய்திகள்