நல்லாண்டார்கொல்லை ஒ.என்.ஜி.சி
எண்ணெய் தொட்டியில் தீ!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நல்லாண்டார்கொல்லை, கருகாக்குறிச்சி, வாணக்கன்காடு, வடகாடு, கறம்பக்குடி ஆகிய ஊர்களில் கடந்த 20 ஆண்டுகளில் ஒ.என்.ஜி.சி. மூலம் எண்ணெய், மற்றும் எரிவாயு எடுக்கும் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.
நல்லாண்டார்கொல்லை கிராமத்தில் கடந்த 2009 ம் ஆண்டு சுமார் 8 ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு சோதனைக்காக அதிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்பட்டுள்ளது. அதன் கழிவுகளை சுமார் 25 அடி நீளம், 25 அடி அகலம் 10 அடி ஆழம் கொண்ட ஒரு தொட்டியில் சேமித்து வைத்திருந்தனர். சுமார் 8 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அந்த கழிவு எண்ணெய் அப்படியே தேங்கி இருந்தது. ஆபத்தான நிலையில் திறந்த வெளியில் எண்ணெய் தொட்டி இருந்தது.
இந்த நிலையில் தான் கடந்த பிப்ரவரியில் நெடுவாசல் கிராமத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து எண்ணெய் கிணறு அமைத்து ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க ஜெம் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து நெடுவாசலில் இன்னும் போராட்டம் நடந்து வருகிறது.
நல்லாண்டார்கொல்லை மக்களும் தொடர்ந்து போராடிய நிலையில் மாவட்ட ஆட்சியர் திறந்தவெளி எண்ணெய் கிணறு மற்றும் எண்ணெய் எடுக்க அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை மூடி கொடுப்பதாக போராடிய மக்களிடம் உத்தரவாதம் எழுதிக் கொடுத்துச் சென்றார். அதனால் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் அதற்காண எந்த பணிகளும் இதுவரை தொடங்கவில்லை. இந்த நிலையில் தான் இன்று மாலை திறந்தவெளி எண்ணெய் தொட்டியில் திடீரென தீ பற்றி எரிந்தது. அதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கீரமங்கலம் தீணயைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துவிட்டு தண்ணீரை வாய்க்காலில் கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. முற்றிலும் எண்ணெய் எரிந்து முடிந்த பிறகே தீ அணைந்தது. அதன் பிறகு வந்த தீயணைப்பு துறையினர் அருகில் தீ பற்றிவிடாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது.. மாவட்ட ஆட்சித் தலைவர் சொன்னபடி இதுவரை எங்களுக்கு எண்ணெய் தொட்டி மற்றம் எண்ண்ணெய் கிணற்றை பாதுகாப்பாக மூடும் எந்த பணியும் நடக்கவில்லை. அதனால் எங்களுக்கு அச்சமாக உள்ளது. உடனே அதற்காண பணிகளை தொடங்காத நிலையில் மீண்டும் போராட்டம் தொடங்குவோம் என்றனர்.
சம்பவ இடத்திற்கு வடகாடு போலிஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல் மற்றும் பலர் வந்தனர். இந்த சம்பவம் காட்டுத் தீ போல பரவியதால் பொதுமக்கள் அதிகமாக திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- இரா.பகத்சிங்