
இராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் போன்றோர் கடந்த 30 வருடங்களாக சிறையில் இருக்கின்றனர். இவர்களில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, தற்போது 7 பேரும் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளனர்.
ஆயுள் தண்டனை என்பது 14 வருடங்கள்தான், இவர்கள் கடந்த 30 வருடங்களாக சிறையில் உள்ளார்கள். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் வலுத்துவருகின்றன. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது; இந்திய ஒன்றிய அரசும் தடுக்கிறது.
உச்ச நீதிமன்றம் அவர்களின் விடுதலை குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம், அதற்கான முழு அதிகாரமும் அதனிடமே உள்ளது எனச் சொல்லிவிட்டது. அதனைத் தொடர்ந்து முதல்வராக இருந்த ஜெயலலிதா செய்த சட்ட குளறுபடிகளால், விடுதலையில் குழப்பம் ஏற்பட்டது. மீண்டும் விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றது. மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றது. அதன்பின் 2018இல் தமிழக அமைச்சரவை கூடி, விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை இயற்றி கவர்னருக்கு அனுப்பியது. அதனை அவர் குடியரசு தலைவருக்கு அனுப்பிவிட்டார். இன்றுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் புதியதாக ஆட்சிக்கு வந்துள்ளது திமுக. தமிழக முதல்வராகியுள்ள மு.க. ஸ்டாலின், அந்த தீர்மானத்தின் மீது விரைவில் நடவடிக்கை எடுங்கள் என கவர்னருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், சிறையில் உள்ள பேரறிவாளன் தனது உடல்நிலைக்கு மருத்துவம் செய்துகொள்ள பரோல் வேண்டுமென அரசுக்கு மனு அளித்தார். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து 1 மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்களுக்கும் பரோல் வழங்க வேண்டுமென முருகன், நளினி இருவரும் சிறைத்துறைக்கு மனு அளித்தனர். அந்த மனுவை சிறைத்துறை துணைத் தலைவர் ஜெயபாரதி தள்ளுபடி செய்துவிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனு அளித்துள்ளதாக அவர்கள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ஓராண்டுக்கு முன்பு நளினி சிறையில் இருந்து ஒருமாதம் பரோலில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு அப்போதும் பரோல் மறுக்கப்பட்டது. இந்தமுறை இருவரும் மனு அளித்துள்ளதால் தமிழ் உணர்வாளர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.