கரோனா இரண்டாவது அலையின் உச்சத்தால், நோய்த் தொற்று பரவும் இக்கட்டான சூழ்நிலையில், உயிரைப் பணயம் வைத்து பொதுமக்களுக்காக போராடிவரும் முன்களப் பணியாளர்களுக்கு காவல் ஆய்வாளர் பாதபூஜை செய்து கௌரவித்திருக்கிறார். நாகை காவல்துறையினர் கரோனா கட்டுபாடுகள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.
அந்த வகையில், நாகை அக்கரைப்பேட்டை கிராமத்தில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாகை நகரக் காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி, மீனவர் போல் வேடம் அணிந்து பொது மக்கள் மத்தியில் கரோனா விழிப்புணர்வு நிகழ்த்தினார். அப்போது மாஸ்க் அணியாமல் வலை பின்னிக்கொண்டிருக்கும் மீனவரைக் கரோனா தொற்று எவ்வாறு கவ்விக்கொண்டு செல்கிறது என்பது போலவும், தினசரி எனக்கு நூறு உயிர் வேண்டும் என எமதர்மன் கூறுவதும், அந்த நூறு பேரை மாஸ்க் அணியாதவர்களாக இனம் கண்டு இறக்கச் செய்வது போலவும் நடித்தனர்.
நிகழ்வில் மீனவர் வேடமிட்டு வலைபின்னுவது போல நடித்தார் இன்ஸ்பெக்டர் பெரியசாமி. அவர் மாஸ்க் அணியாமல் வேலை செய்ததால் கரோனா தொற்று பற்றிக்கொண்டு பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்வது போன்ற காட்சிகளில் காவல் ஆய்வாளர் பெரியசாமி தத்துரூபமாக நடித்து மீனவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து நோய்த் தொற்று பரவும் இக்கட்டான சூழ்நிலையில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து பொதுமக்களுக்காகப் போராடிவரும் முன் களப்பணியாளர்களான மருத்துவர், போலீஸ், துப்புரவுப் பணியாளர் ஆகியோரை வரிசையாக அமரவைத்து கவுரவிக்கும் விதமாக காவல் ஆய்வாளர் பெரியசாமி பாதபூஜை செய்தார்.
காக்கி உடையில் கம்பீரமாக பணியாற்றும் காவல்துறையினர் மத்தியில், முன்களப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து மீனவர்கள் மத்தியில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய நாகை காவல் ஆய்வாளர் பெரியசாமியின் செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.