கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான செய்திகளை நமது நக்கீரனின் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் நேற்றும் நமது முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது; “கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம உயிரிழப்பு விவகாரத்தில், நக்கீரன் புலனாய்வு இதழ் தொடர்ச்சியாக தனது புலனாய்வை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சில முக்கிய தகவல்களை சேகரித்துவிட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோரை பின்தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் புலனாய்வு தகவல்கள் அடங்கிய மொபைல் போனையும் அந்த கும்பல் பறித்துச் சென்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்யவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. தமிழக அரசு பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.